“குடிஉரிமை சட்ட திருத்த மசோதாவை வங்கக் கடலில் தூக்கி எறியுங்கள்” என்று நாடாளுமன்றத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கொந்தளித்துள்ளார்.

பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த “குடிஉரிமை சட்ட திருத்த மசோதா” மக்களவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து, நேற்று மாநிலங்களவையிலும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

மாநிலங்களவையில் மசோதாவிற்கு ஆதரவாக 125 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் பதிவானது. இதனையடுத்து, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட “குடிஉரிமை சட்ட திருத்த மசோதாவை” குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு, பிறகு அது சட்டமாகக் கொண்டுவரப்படும்.

இதனிடையே, மாநிலங்களவையிலும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா கொண்டுவரும்போது, வைகோ கடுமையாகக் கொந்தளித்துப் பேசினார்.

அதன்படி, “யமுனா நதிக்கரையில் எரிக்கப்பட்ட உலக உத்தமர் காந்தி அடிகளின் எலும்புத் துகள்கள் இன்று இந்த மசோதாவை, நாடாளுமன்றத்தில் கொண்டு வருவதை அறிந்து நடுங்கி இருக்கும்.

மக்கள் ஆட்சிக் கோட்பாடுகளுக்கு எதிரான, வெறுப்பு ஊட்டுகின்ற, அதிர்ச்சி அளிக்கின்ற, முறையற்ற, மன்னிக்க முடியாத, நேர்மை அற்ற, குடி உரிமைச் சட்டத் திருத்த முன்வரைவு, இன்று இந்த மாநிலங்கள் அவையில் நிறைவேற்றப்படுமானால், அது இந்த அவையின் வரலாற்றில் ஒரு கருப்பு நாள் ஆகி விடும்.

இந்தச் சட்டம், சமூகத்தின் ஒரு பிரிவினரை, எதிரிகளாகக் காட்ட முனைகின்றது. சுருக்கமாக, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கனிஸ்தான் ஆகிய முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளில் உள்ள, முஸ்லிம்கள் அல்லாத மக்களுக்கு, இந்தியாவில் குடி உரிமை அளிக்கப்படும் என வரவேற்கின்றது.

ஆனால், நீண்டகாலமாக இந்தியாவில் இருக்கின்ற, இலங்கையிலிருந்து வந்த தமிழர்கள், மியன்மர் நாட்டில் இருந்து வந்த ரொகிங்யா முஸ்லிம்கள் ஆகிய அகதிகளின் நிலை குறித்து, இந்தச் சட்டத்தில் எந்த அறிவிப்பும் இல்லை.

மேலும், அண்டை நாடுகளில் அடக்குமுறைக்கு உள்ளாகி இருக்கின்ற ஷியா மற்றும் அகமதியா முஸ்லிம்கள், இந்தியாவில் குடிஉரிமை கோருவதை, இந்தத் திருத்தம் தடை செய்கின்றது.

இது சமத்துவத்திற்கு எதிரான தாக்குதல்; மதச்சார்பு இன்மைக்கு எதிரான தாக்குதல்; மக்கள் ஆட்சிக் கோட்பாட்டின் மீதான தாக்குதல்.

இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, பல்வேறு துறை விற்பன்னர்கள், அறிவியல் ஆராய்ச்சி அறிஞர்கள், இந்தச் சட்டத்திருத்தத்தைக் கண்டித்து இருப்பதுடன், உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த வேண்டுகோளில் கையெழுத்து இட்டு இருப்பவர்கள், முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

பன்னாட்டு அறிவியல் கோட்பாடுகள் ஆய்வு மைய அறிஞர் ராஜேஷ் கோபகுமார், டாடா ஆய்வு மையத்தின் சந்தீப் திரிவேதி, இராமன் மக்சேசே விருது வென்ற சந்தீப் பாண்டே, எஸ்.எஸ். பட்நாகர் விருது வென்ற ஆதிஷ் தபோல்கர், ருக்மணி பாயா நாயர், சோயா ஹசன், ஹர்பன்ஷ் முகியா உள்ளிட்ட அறிஞர்கள் அந்தக் கோரிக்கை விண்ணப்பத்தில் கையெழுத்து இட்டுள்ளனர்.

கீழ்காணும் கருத்தை அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இந்திய விடுதலைப்போராட்டத்தில் முகிழ்த்த இந்திய நாடு எனும் கருத்து, அரசியல் சட்டத்தால் உருப்பெற்றது. அனைத்து சமய வழிபாட்டு நம்பிக்கை கொண்ட மக்களையும் சமமாகப் பேண உறுதி பூண்டுள்ளது. இங்கே, மதம் என்ற அளவுகோல் கொண்டு வரப்படுமானால், அது அரசியல் சட்டத்திற்கு எதிரானது ஆகும்.

இந்தச் சட்டத்திருத்த முன்வரைவில், முஸ்லிம்கள் மட்டும் நீக்கப்பட்டு இருப்பது, இந்த நாட்டின் பன்முகத்தன்மைக்கு ஊறு விளைவிக்கும் என நாங்கள் அஞ்சுகின்றோம். இதுகுறித்து, சட்ட அறிஞர்கள்தான் ஆய்வு செய்து கருத்துக் கூற வேண்டும் என்றாலும், எங்கள் பார்வையில், இது உணர்வுகளை மீறுகின்றது.

ஈழத்தமிழர்கள் இனப்படுகொலைக்கு உள்ளாகி, எங்கள் பெண்கள், எங்கள் சகோதரிகள், எங்கள் மக்கள் படுபயங்கரமாக, குரூரமாகக் கொலை செய்யப்பட்டனர். ஏதிலிகளாக வந்த அவர்களைப் பற்றி இந்த அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை, அவர்கள் குடி உரிமையைப் பற்றி யோசிக்கக்கூட இவர்களுக்கு மனம் இல்லை.

இரத்தம் தோய்ந்த கரங்களோடு வந்த இலங்கை அதிபரோடு கை குலுக்கி, கொஞ்சிக் குலாவத்தான் உங்களுக்கு நேரம் இருந்தது. ஈழத்தமிழர்களைப் பற்றி உங்களுக்குக் கவலை இல்லை.

இந்தச் சட்டத்தை, வங்கக் கடலில் தூக்கி எறியுங்கள்” என்று வைகோ ஆவேசம் பொங்கப் பேசினார். வைகோவின் இந்த பேச்சு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.