உத்தரப்பிரதேசத்தில் காற்று மாசு காரணமாகச் சிவலிங்கத்துக்கு மாஸ்க் அணிவிக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

டெல்லியில் காற்று மாசு காரணமாக, அங்குள்ள பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், காற்று மாசில் குழந்தைகள் பாதிக்கப்படாமல் இருக்க, அங்குள்ள பள்ளிகளுக்கு நாளை வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசம் மாநிலத்திலும் காற்று மாசு அடைந்து காணப்படுகிறது. இதனால், அந்த மாநிலங்களில் உள்ள பொதுமக்கள் முகத்தில் மாஸ்க் அணிந்தவண்ணம் வெளியே செல்கின்றனர்.

இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் உள்ள தர்கேஷ்வர் மகாதேவ் கோயிலில் உள்ள சிவபெருமானுக்கும் மாஸ்க் அணிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கோயிலில் உள்ள அம்பாள் உள்ளிட்ட மற்ற தெய்வங்களுக்கும் மாஸ்க் அணிவிக்கப்பட்டுள்ளது. கோயில் குருக்களும் முகத்தில் மாஸ்க் மாட்டியபடியே, சிவபெருமானுக்குப் பூஜை செய்கின்றனர்.

இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள கோயில் குருக்கள், “காற்றில் மாசு பரவி வருவதாகவும், இந்த மாசடைந்த காற்றிலிருந்து கடவுளைக் காப்பாற்ற எங்களுக்கு வேறு வழிதெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், கடவுள் நலமுடன் இருந்தால் தான், மக்களாகிய நாமும் நளமுடன் இருக்க முடியும். அதனால், சிவபெருமானுக்கு மாஸ்க் அணிவிக்கப்பட்டுள்ளதாகவும்” கூறி உள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தில் சிவபெருமான், அம்பாள் தெய்வங்களுக்கு மாஸ்க் அணிவிக்கப்பட்டுள்ள சம்பவம் சமூக வலைத்தளங்களில் தீயாகச் செய்தி பரவி வருகிறது. இது, பல்வேறு விமர்சனங்களை எழுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.