வெங்காயத்திற்காக 3 பெண்கள் அடித்துக் கொண்டு கைதாகி விடுதலை செய்யப்பட்ட ருசிகரமான சம்பவம் நடந்துள்ளது.

இந்தியாவில் கடந்த மாதம் வெங்காயத்தின் விலை உச்சத்தைத் தொட்டு வருவதாகத் தொடர்ந்து செய்திகள் வெளியானது. இதனால், தக்காளி உள்ளிட்ட சில காய்கறிகளின் விலையும் தானாக உயர்ந்தது.

இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலம் அம்ரோஹோவில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் சில பெண்கள் வெங்காயம் வாங்குவது தொடர்பாக, பேசிக்கொண்டிருந்தனர். நேஹா என்ற பெண் வெங்காயத்தைப் பேரம் பேசியதாகத் தெரிகிறது. அப்போது, அந்த கடைக்கு வந்த தீப்தி என்ற அவரது பக்கத்து வீட்டுப் பெண், கடைக்காரரிடம் “வெங்காயம் என்ன விலையானாலும் என்னிடம் அப்படியே தாருங்கள், இந்த பெண்ணுக்கு இந்த வெங்காயத்தை எல்லாம் வாங்கும் அளவுக்கு வசதி பத்தாது” என்று கிண்டலாகக் கூறி உள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த நேஹா வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், இருவருக்கும் இடையே கை களப்பாக மாறி, இருவரும் மார்க்கெட்டிலேயே ஒருவரை ஒருவர் சராமாறியாக அடித்துக்கொண்டனர். மேலும், இருவருடைய குடும்பத்தைச் சேர்ந்த பெண்களும், சேர்ந்து ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு சண்டை போட்டனர். இதில், 3 பேருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது.

இது குறித்து விரைந்து வந்த போலீசார், 3 பேரையும் கைது செய்தனர். அத்துடன், பலத்த காயம் அடைந்த 3 பேரையும் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். இதனைத்தொடர்ந்து, நீதிமன்றத்தில் 3 பெண்களையும் போலீசார் ஆஜர் படுத்தினர். அங்கு 3 பேருக்கும் ஜாமீன் கிடைத்ததால், 3 பேரும் விடுவிக்கப்பட்டனர்.

இதனிடையே, வெங்காயத்திற்காக, 3 பெண்கள் அடித்துக்கொண்டு கைதாகி, பின்னர் வெளியே வந்துள்ள சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.