காட்டுக்குள் காரோடு சேர்த்து பெண் ஒருவர் எரிக்கப்பட்ட நிலையில், எழும்பு கூடாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி லால்குடி தாலுகாவிற்கு உட்பட்ட தச்சங்குறிச்சி - ரெட்டி மாங்குடி செல்லும் சாலையில் வனத்துறைக்குச் சொந்தமான பகுதி உள்ளது. அந்த வனப்பகுதியில், இன்று காலை கார் ஒன்று தீ பற்றி எரிவதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, அந்த இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், தீ பிடித்து எரிந்த காரை ஆய்வு செய்தனர். அப்போது, காரோடு சேர்த்து பெண் ஒருவர் எரிக்கப்பட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து, எரிக்கப்பட்ட பெண் எழும்புக்கூடாக மீட்கப்பட்டார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தீ வைத்து எரிக்கப்பட்ட பெண் யார்? அந்த கார் யாருடையது? என்று தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இந்த வனப்பகுதியில் கடந்த ஒரு வரடத்தில் மட்டும் 4 கொலைகள் நடந்துள்ளதாகவும், அதில் ஒரு கொலை வழக்கில் மட்டும், குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், மீதி 2 கொலை வழக்கில் குற்றவாளிகள் யார் என்று இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இதே பகுதியில் மேலும் ஒரு கொலை சம்பவம் நடந்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.