தமிழ்நாட்டில் சுனாமி என்னும் ஆழிப்பேரலை தாக்கியதன் 15 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

“அலைகள் ஓய்வதில்லை தான். அதற்காக, ஊருக்குள் வந்தா அலைகள் உலை வைப்பது?”

“அலைகள் அழகு என்று சொன்னவன் எவன்?”

“கடல் அலைகள் அழகற்றதோ என்று தெரியவில்லை. ஆனால், அது இறக்கமற்றது என்பதை நிரூபித்த நாள் இது!”

தமிழ்நாடே அதிகாலை உறக்கத்திலிருந்து துயில் எழத்தொடங்கிய தருணம் அது. சிலர், துயில் எழுந்து, கடற்கரை பகுதிகளில் அதிகாலை வாங்கிங், ஜாக்கிங் என சுழன்றுகொண்டு இருந்தனர்.

அம்மாக்கள் தனது குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப ஆயத்தமாகிக்கொண்டிருந்தார்கள். அதிகாலை நேரத்தில், குழந்தைகளும் செல்ல சிணுங்கலுடன் பள்ளிக்குக் கிளம்பிக்கொண்டிருந்தனர்.

அப்போது தான், அந்த கோரத் தாண்டவத்தின் மரண ஓலம், ஓங்கிப் பெரு ஒலியாய் ஒலித்தது. மின்னல் வேகத்தில் வந்த சுனாமி, மனித உயிர்களை வாரி சுருட்டி கடலுக்குள் போய் ஒளிந்துகொண்டது.

பச்சிளம் பிள்ளைகளை இழந்த தாய்மார்கள், தாய்மார்களை இழந்த பிள்ளைகள், கணவனை இழந்து விதவையாக்கப்பட்ட இளம் பெண்கள், மனைவிகளை பறிக்கொடுத்த கணவர்கள் என்று ஊரெங்கும் மரண ஓலத்தின் சத்தம் உறக்க சொன்னது. ஊரே விதவையாகிப்போன நிகழ்வு, இந்த நூற்றாண்டில் முதல் முறையாக நிகழ்ந்தது.

கடற்கரை ஓரம் வசித்தவர்கள் எல்லாம், மரண வாசலுக்குள் நுழைந்தார்கள். அதில், ஒன்றிரண்டு பேர் தான் தப்பித்து, பிழைத்தார்கள்.

அந்த மரண ஓலத்தின் வடு, கடற்கரை ஓரங்களில் இன்னும் ஆறவில்லை. அப்படியொரு அபாயகரமான சத்தம் கேட்டு, உலகையே உலுக்கிய நாள் தான் இன்று.

ஆம், கடந்த 2004 ஆம் ஆண்டு, இதே நாளில் தான் சுனாமி என்னும் ஆழிப்பேரலை, ஊரை அழிப்பதாக நினைத்து, உயிர்களை அழித்துவிட்டது. இந்தியா உட்பட மொத்தம் 14 நாடுகளில் எதிரொலித்த சுனாமி, பல லட்சம் மனித உயிர்களைக் காவு வாங்கியது. அதன் நீங்க நினைவுகள், 15 ஆம் ஆண்டாக இன்று அனுசரிக்கப்படுகிறது.

இந்த நாளில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, தமிழகம் முழுவதும் உள்ள மீனவர்கள் யாரும் இன்று கடலுக்குச் செல்லவில்லை.

இதன் காரணமாக மீன் விற்பனை அங்காடிகளிலும் மூடப்பட்டுள்ளன. மேலும், கடலோரப் பகுதிகள் முழுவதும் அதிகாலை முதல் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.

பலரும், தங்கள் பழைய நினைவுகளில் மூழ்கி உள்ளனர். அவர்களுக்குக் கலாட்டா சார்பாகக் கண்ணீர் அஞ்சலி!