தமிழகத்தில் மேலும் சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொரோனா பரவல் காரணமாகத் தமிழகத்தில் கடந்த மார்ச் இறுதி வாரம் முதல் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், கொரோனா வைரஸ் தொற்று சற்றும் குறையாமல் தொடர்ந்து அதிகரித்ததால், தமிழகத்தில் ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டன.

அதன்படி கடந்த 1 ஆம் தேதி முதல் வரும் 30 ஆம் தேதி தமிழகம் முழுவதும் பல தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. ஆனால், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தீவிரமாகப் பரவத் தொடங்கியதால், தளர்வுகள் அனைத்தும் நீக்கப்பட்டு சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு மீண்டும் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.

ஆனாலும், சென்னையைத் தொடர்ந்து மதுரை, வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்று மேலும் பரவத் தொடங்கியது. இதனால், குறிப்பிட்ட இந்த மாவட்டங்களில் மட்டும் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதன் காரணமாக மதுரை, வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் முழு முடக்கம் அமல்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாகச் செய்திகள் தற்போது வெளியாகி உள்ளன.

மேலும், கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மதுரையில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காத கடைகளுக்குச் சீல் வைக்கப்படும் என்றும், காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் கூறியுள்ளார்.TNFightsCorona ,