தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்திற்கு மர்ம நபர் ஒருவர், தொலைப்பேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். குறிப்பாக. முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் வீடுகளிலும் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், தலைமைச் செயலகம் முழுவதும் சோதனை மேற்கொண்டனர். அத்துடன், ப்லோரா என்ற மோப்ப நாய் உதவியுடன், வெடிகுண்டு நிபுணர்கள் முழு வீச்சில் சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும், தலைமைச் செயலகத்திற்குள் வரக்கூடிய வாகனங்கள் அனைத்தும், முழுமையான பரிசோதனைக்குப் பிறகே, உள்ளே அனுமதிக்கப்படுகின்றன. அதேபோல், தலைமைச் செயலகத்திற்குள் உள்ளே வரும் பொதுமக்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் முழுவதும் பரிசோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

இதனையடுத்து, தொலைப்பேசி மூலம் வந்த மிரட்டல் பொய்யானது எனத் தெரியவந்தது. இதனையடுத்து, முதலமைச்சர், துணை முதலமைச்சர் இல்லங்கள், தலைமைச் செயலகம் போன்ற முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரைக் கண்டு பிடித்து போலீசார் கைது செய்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே முதலமைச்சர் பழனிசாமி,மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்வதற்காக, இன்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.