ஒரு தலை காதலால் கல்லூரி மாணவி கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த புலியரசி பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர், கிருஷ்ணகிரி ராயக்கோட்டை சாலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில், கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் அந்த மாணவி கல்லூரிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த சாலையில் வேகமாக வந்த காரில் மொத்தம் 6 பேர் இருந்துள்ளனர்.

மாணவி அருகில் கார் வந்ததும், கார் ஸ்லோவாகி மாணவி அருகில் வந்து நின்றது. இதனையடுத்து, கண் அமைக்கும் நேரத்தில், அந்த 6 பேரும் மாணவியை மின்னல் வேகத்தில் காருக்குள் இழுத்துப்போட்டு, மாணவியைக் கடத்திச் சென்றனர்.

இதில், மாணவி கத்தி கூச்சலிடவே, அந்த வழியாகத் சென்றவர்கள் இருசக்கர வாகனத்தில் காரை விரட்டிச் சென்றனர்.

பொதுமக்கள் ஏராளமானோர், தங்களை ப்லோ பண்ணி வருவதால், வேறு வழியின்றி மாணவியைச் சாலையிலேயே இறக்கிவிட்டு, அந்த கடத்தல் கும்பல் தப்பிச் சென்றது.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மாணவியிடம் வாசரித்துள்ளனர்.

விசாரணையில், சூளகிரி அடுத்த புலியரசியில், மாணவியின் வீடு அருகே 25 வயதான டிராவல்ஸ் அதிபர் கார்த்திக் என்பவரின் பாட்டி வீடு உள்ளது. பாட்டி வீட்டிற்கு கார்த்திக் வரும்போது, இந்த மாணவியை அடிக்கடி சந்தித்துள்ளார். இதனையடுத்து, மாணவியை ஒருதலை பட்சமாக அவர் காதலித்துள்ளார்.

பின்னர், மாணவி வீட்டிற்கு வந்து, அவர் பெண் கேட்டுள்ளார். ஆனால், “மாணவி படிக்க வேண்டும் என்றும், இப்போது திருமணம் செய்து வைக்கும் எண்ணம் இல்லை” என்றும் மாணவியின் பெற்றோர் கூறியுள்ளனர்.

இதனால், மாணவியைக் கடத்தி, திருமணம் செய்துகொள்ள தன் சக நண்பர்களுடன் கார்த்திக், இளம் பெண்ணை கடத்தியது தெரியவந்தது. இந்த கடத்தலில், பெங்களூருவைச் சேர்ந்த டிராவல்ஸ் அதிபர் கார்த்திக் மற்றும் அவரது கூட்டாளிகள் உடன் வந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீசார், கார்த்திக் உள்ளிட்ட அவரது கூட்டாளிகள் அனைவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

இதனிடையே, பட்ட பகலில் கல்லூரி மாணவி காரில் கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.