அதிசய நிகழ்வான நெருப்பு வளைய சூரிய கிரகணம் தற்போது வானில் தோன்றி உள்ளது.

வானில் எப்போதாவது தான், அரிதினும் அரிதாக சில நிகழ்வுகள் நிகழ்வதுண்டு. அப்படியான மிக அற்புதமான ஓர் அரிய நிகழ்வு தான், தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

அதன்படி, இ‌யற்கையின் விந்தைகளில் ஒன்றான, வளைய சூரிய கிரகணம் என்னும் அறிவியல் நிகழ்வு, தமிழ்நாட்டி‌ன் பல்வேறு பகுதிகளில் தெரியத் தொடங்கியது.

மிகச் சரியாகக் காலை 8 மணிக்கு மெல்ல மெல்லச்சூரியனின் மையத்தை நோக்கி நிலா நகரத் தொடங்கியது. பின்னர், நிலா சூரியனை முழுவதுமாக மறைத்து, பின்னர் நெருப்பு வளைய சூரிய கிரகணம் தெரிந்தது.

இந்த அறிய நிகழ்வானது, பகல் 11 மணி 20 நிமிடங்கள் வரை நீடிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதனால், 3 மணி நேரம் 20 நிமிடங்கள் வரை, இந்த அறிய நிகழ்வு வானில் தோன்றி இருக்கும்.

சூரியனை, நிலவு மறைக்கும் நெருப்பு வளைவு கிரகணத்தின் அரிய காட்சியானது, காலை மிகச் சரியாக 9.29 முதல் 9.32 வரை நிகழ்ந்தது. சூரிய கிரகணத்தைக் காண மக்கள் அதிக ஆர்வம் காட்டினர். அந்த நேரத்தில், வெளிச்சமின்றி பூமியில் இருள் சூழ்ந்து இருந்தது.

சூரிய கிரகணத்தைக் காண, பிர்லா கோளரங்கம் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தது. மேலும், வெறும் கண்ணால் பார்க்கக் கூடாது என விஞ்ஞானிகள் அறிவுறுத்தியிருந்தனர்.

தமிழகத்தில் உதகை, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை ஆகிய பகுதிகளில் மட்டுமே வளையச் சூரிய கிரகணம் தெரிந்தது. இதனால், உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் மற்றும் வானியல் ஆய்வாளர்கள் தமிழ்நாட்டிற்கு வருகை தந்திருந்தார்கள்.

அதே நேரத்தால், இந்தியா முழுமைக்கும் சூரிய கிரகணத்தின் பிறை வடிவத்தை மட்டுமே காண முடிந்ததாகக் கூறப்படுகிறது. அதேபோல், துபாயில் முழுமையாய் நெருப்பு வளைய சூரிய கிரகணம் தெரிந்தது என்று கூறப்படுகிறது.

இதனிடையே, சூரிய கிரகணத்தை முன்னிட்டு, பொதுமக்கள் பலரும் வீட்டை விட்டு வெளியே வராததால், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல இடங்களில் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.