ஆபாச படம் பார்த்த விவகாரத்தில் எடுக்கப்படக்கூடிய கைது நடவடிக்கை பீதியைக் கிளப்பி உள்ளது.

நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பல்வேறு குற்றச் சம்பவம் நடைபெற்று வருகிறது. இது, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், அந்த குற்ற சம்வங்களை செய்யத் தூண்டக்கூடிய ஆபாசப்படத்தைப் பார்த்தவர்கள் மற்றும் அதனை எடுத்தவர்கள் தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்பட்டு வந்தன.

அதன்படி, இணையதளம் மூலமாகச் சமீபத்தில் சுமார் 3 ஆயிரம் பேர் ஆபாச படம் பார்த்ததாகப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஏ.டி.ஜி.பி. ரவி, தெரிவித்திருந்தார். இதனால், செல்போன் மூலம் ஆபாச படம் பார்த்தவர்கள் பயத்தில் உரைந்துபோனார்கள்.

இந்நிலையில், இது தொடர்பா ஏ.டி.ஜி.பி. ரவி, விளக்கம் அளித்துள்ளார். அதன்படி, தமிழ்நாடு சைபர் பிரிவு மற்றும் தனியார் ஏஜென்சி மூலமாக இந்த ஆபாசப்படம் பார்த்தவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். மேலும், இதைக் கண்டறிய சமீபத்திய டெக்னாலஜி மற்றும் கருவிகள் மூலம் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக, ஆபாச படத்தை இணையத்தில் பதிவேற்றம் செய்தவர்கள் பெயர்கள் பட்டியலில் முன்னிலையில் இருப்பதாகவும், ஆபாசப் படத்தை இணையத்தில் பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்தவர்கள் பெரும்பாலும் இளைஞர்கள் என்றும் அவர் கவலைத் தெரிவித்தார்.

இதனையடுத்து, அந்த 3 ஆயிரம் பேரும், தமிழ்நாட்டின் எந்தெந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று கண்டுபிடித்து, அந்தந்த பகுதியில் உள்ள காவல்நிலையம் மூலம் அவர்கள் வீட்டிற்குச் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். விசாரணைக்குப் பின்னர் குற்றம் நிரூபிக்கப்பட்டால், 3 ஆண்டு முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் இது சார்ந்த குற்றம் நடைபெறாமல் தடுப்பதே, இந்த பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டதின் நோக்கம் என்றும் ஏ.டி.ஜி.பி. ரவி விளக்கம் அளித்தார்.