“தேசிய குடிமக்கள் பதிவேட்டின் மூலம் குடியுரிமை பறிக்கப்பட்டால் கைலாசாவுக்கு போய் அழகா வாழ்வோம்!” என்று சீமான் கலகலப்பாகப் பேசியுள்ளார்.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, சென்னையில் நாம் தமிழர் கட்சி சார்பில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் கலந்துகொண்டபோது பேசிய சீமான்,“தேசிய குடிமக்கள் பதிவேட்டின் மூலம் தமது குடியுரிமை பறிக்கப்பட்டால், கவலைப்படப்போவதில்லை. புதிதாக கைலாசா நாடு உருவாகிடுச்சு. எங்கள் அதிபர் நித்தியானந்தா இருக்கிறார். கைலாசா நாட்டுக்குச் சென்று அழகாய் வாழ்வோம்” என்று நகைச்சுவையாகப் பேசிவிட்டு, அவரும் சிரித்து விட்டார்.

சீமானின் கைலாசா நாடு குறித்த இந்த நகைச்சுவை பேச்சு, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதனிடையே “ஸ்ரீ கைலாஷ் ஒன்றும் திறந்த மடம் இல்லை. தமிழ் பிரிவினைவாதிகளை அனுமதிக்க, அரசியல் துறந்து திருவண்ணாமலை கோயில் தீபம் ஏற்றி, அன்னை மீனாட்சியின் பாதம் வணங்கினால் சீமானுக்குக் குடியுரிமை வழங்கத் தயார்” என்று ஸ்ரீ கைலாஷ் பிரதமர் அலுவலகம் தரப்பிலிருந்து பதில் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்த பதிலும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.