குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராகப் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், தலைநகர் டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாகத் தலைநகர் டெல்லியில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதல், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனால், டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாகவும், குடியுரிமைச் சட்ட மசோதாவுக்கு எதிராகவும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சிகள், இஸ்லாமிய அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் எனத் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

டெல்லியில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் நேற்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 4 அல்லது அதற்கு மேற்பட்டோர் கூடுவதற்கு அங்கு அதிரடியாகத் தடை விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இன்று டெல்லியில் செங்கோட்டை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தடையை மீறி டெல்லியில் போராட்டம் மற்றும் பேரணியில் ஈடுபட்ட பலரையும் போலீசார் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர்.

அத்துடன், டெல்லி நகர் முழுவதும் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார், பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படு வருகின்றனர். பல்வேறு முக்கிய சாலைகள் மற்றும் ஆளும் கட்சி பிரமுகர்கள் இருக்கும் குடியிருப்பு பகுதிகள் என பல்வேறு இடங்களில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்துவதற்காக, அண்டை மாநிலங்களான ஹரியானா, உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் அமைப்பினர் டெல்லிக்குப் படையெடுத்து வருகின்றனர்.

இதனால், டெல்லி எல்லைப் பகுதிகளில், போராட்டக்காரர்கள் தலைநகருக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில், பலத்த தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அதேபோல், டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டன. புறநகர்ப் பகுதிகளிலிருந்து டெல்லிக்குள் போராட்டக்காரர்கள் வருவதைத் தடுக்கும் வகையில், இந்த அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மிக முக்கியமாக, டெல்லியின் சில பகுதிகளில் செல்போன் அழைப்பு, இணைய சேவை, மற்றும் SMS ஆகிய வசதிகளை ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்கள் எந்த முன் அறிவிப்பும் இன்றி திடீரென்று நிறுத்தி வைத்துள்ளது. ஜியோ, பி.எஸ்.என்.எல். சேவைகளும் குறிப்பிட்ட பகுதிகளில் இன்று அதிரடியாக முடக்கப்பட்டுள்ளன.

போராட்டத்தில் ஈடுபடுவோர், சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி, ஆட்களைத் திரட்டுவது மற்றும் வதந்திகளைப் பரப்புவதைத் தடுக்கும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆளும் தரப்பில் கூறப்படுகிறது.

உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் இன்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி இன்று சமாஜ்வாதி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும், மத்திய அரசுக்கு எதிராகவும், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

அதேபோல், கர்நாடக மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பாஜக ஆளும் கர்நாடகா மாநிலம் முழுவதும் நாளை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பெங்களூரு டவுன் ஹாலில் போராட்டத்தில் கலந்து கொண்ட வரலாற்று ஆசிரியர் ராமச்சந்திர குஹா, உட்பட 100-க்கணக்கனோரை போலீசார் தற்போது அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

அதேபோல், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக புதுச்சேரியில் கல்லூரி மாணவர்கள் மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் பல்வேறு கல்லூரிகளில் மாணவர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. சென்னையில் உள்ள சில முக்கிய கல்லூரிகளில் மாணவர்களின் போராட்டத்தால் பயந்துபோன போலீசார், நள்ளிரவு நேரத்தில் அத்துமீறி கல்லூரிக்குள் நுழைந்து மாணவர்களைக் கைது செய்து வருகின்றனர்.

மதுரையிலும் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். திருச்சியில் 100க்கணக்கான மாணவர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். போராட்டத்தின்போது, போலீசாருக்கும் - மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே, நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் என அனைத்து தரப்பினரும் அதிரடியாகக் கைது செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அதேபோல், போராட்டம் குறித்து, சமூக ஊடகங்கள் வாயிலாக ஆட்களைத் திரட்டுபவர்களும் போலீசாரால் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.