சச்சின் டெண்டுல்கர் தமிழன் ஒருவரைத் தேடி வருவது தொடர்பாக, தமிழில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதிர்ஷ்டம் எப்போதாவது ஒருமுறை தான், வீட்டு கதவைத் தட்டும் என்பார்கள் நமது முன்னோர்கள். அப்படி ஒரு அதிர்ஷ்டம் தான், தமிழர் ஒருவருக்கு தற்போது வந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராகப் புகழ்பெற்றுத் திகழ்ந்த, மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர், இந்திய அணிக்காக விளையாடியபோது, டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காகச் சென்னை வந்துள்ளார்.

அப்போது, அவர் நுங்கம்பாக்கம் தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் தங்கி உள்ளார். அந்த நேரத்தில், அங்கு பணியாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவர், சச்சின் பயன்படுத்தும் எல்போ கார்ட் பற்றி, அவருக்கு புதிய ஆலோசனை ஒன்றை வழங்கி உள்ளார்.

அதன்பிறகு, அந்த இளைஞர் சொன்னதுபோலவே, சச்சின் தனது எல்போ கார்ட்டை மாற்றி உள்ளார். அதன்பிறகு, சில ஆண்டுகள் விளையாடிய சச்சின், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

இந்நிலையில், பல ஆண்டுகள் கடந்த நிலையில், கோரமண்டல் ஹோட்டலில் தனக்கு ஆலோசனை வழங்கிய அந்த ஊழியரைத் தாம் தேடி வருவதாக சச்சின் டெண்டுல்கர் தமிழில் பதிவிட்டுள்ளார்.

அதன்படி, “எதிர்பாராத சந்திப்புகள் சில சமயம் மறக்க முடியாத தருணங்களாக மாறுகின்றன. சென்னை டெஸ்ட் தொடரின்போது, சென்னை தாஜ் கோராமண்டல் ஊழியர் ஒருவர் என்னுடைய Elbow Guard பற்றிக் கூறிய ஆலோசனைக்குப்பின் அதன் வடிவத்தை மாற்றினேன். அவரை சந்திக்க ஆசைப்படுகிறேன். கண்டுபிடிக்க எனக்கு நீங்கள் அனைவரும் உதவ வேண்டும்” என்று தமிழக மக்களிடம் சச்சின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சச்சினின் இந்த தமிழ் வேண்டுகோள், சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.