சென்னையில் கொரோனோ நோயாளிகள் அதிகரிக்க என்ன காரணம் என்பது குறித்து, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று பரவிய நிலையில், சென்னை மட்டும் அதிகபட்சமாக 176 பேருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், சென்னை மக்கள் கடும் பீதியடைந்தனர்.

இதனையடுத்து, கொரோனா தொற்று அதிகம் கண்டறியப்பட்ட பகுதிகளில், கிருமி நாசினி முழு வீச்சில் தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அத்துடன், கிருமி நாசினி தெளிக்கும் இயந்திர வாகனங்களில், அலாரத்துடன் கூடிய அவசரக்கால விளக்குப் பொருத்தப்பட்டு பயன்பாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், “இந்திய அளவில், மற்ற மாநிலங்களைக் காட்டிலும், 8 மடங்கு அதிகமாகப் பரிசோதனை செய்வதால், சென்னையில் கொரோனோ நோயாளிகள் அதிகமாகக் காணப்படுவதாக குறிப்பிட்டார்.

இதுவரை, “சென்னை மாநகராட்சியில் 10 லட்சம் பேருக்கு 4000 மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது” என்றும், அவர் சுட்டிக்காட்டினார்.

“சென்னையில் நோய் தொற்று அதிகரிப்பதற்கான காரணமே, குறுகிய பரப்பளவில் அதிகப்படியான மக்கள் வசிப்பதால் தான் பரவுகிறது என்றும், ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 25000 - 50000 க்கும் மேல் மக்கள் வசிப்பதால், சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்துக் காணப்படுகிறது” என்றும் ஆணையர் பிரகாஷ் விளக்கம் அளித்தார்.

மேலும், “சென்னையைப் பொறுத்தவரை தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு‌.வி.க. நகர் மண்டலங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

என்றும், இந்த 3 மண்டலங்களுக்கு 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், 10 ஐ.பி.எஸ். அதிகாரிகள், 10 கோட்டாட்சியர்கள், 10 மருத்துவ வல்லுநர்கள் என 40 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக” கூறினார்.

“இதுவரை தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சியின் 19 துப்புரவுப் பணியாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றும், அவர்களுக்கு நோய் தொற்றுக்கான அறிகுறிகளே இல்லாமல், கொரோனா பரவி உள்ளதாகவும்” சுட்டிக்காட்டினார்.

“தூய்மை பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் வகையில், விட்டமின் சி மாத்திரைகள், கபசுரக் குடிநீர் தொடர்ந்து 10 நாட்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது” என்றும் தெரிவித்தார்.

“கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மீறுபவர்கள் மீது, இன்று முதல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும், திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

குறிப்பாக, “சென்னையில் விதியை மீறினால் 100 ரூபாய் அபராதத்துடன், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்” என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதேபோல், “அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை மீறி, சமூக இடைவெளிகளை முறையாக கடைபிடிக்காமால் இயங்கும் வங்கி அலுவலகங்கள், ஏடிஎம் மையங்கள், அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகள் உடனடியாக மூடப்பட்டு சீல் வைக்கப்படும்” என்றும், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கண்டிப்புடன் கூறியுள்ளார்.