பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அரசுப் பள்ளி ஆசிரியர் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கொங்களம்மன் கோவில் பகுதியில், அரசு நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு, சுமார் 50 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

குறிப்பாக, இப்பள்ளியில் பட்டியலினத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தான் அதிக அளவில் படித்துவருகின்றனர்.

இந்த பள்ளியில், ஒடுவன் குறிச்சி பகுதியைச் சேர்ந்த 37 வயதான சுரேஷ் என்பவர், கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர், கடந்த வாரம் 8 ஆம் வகுப்பு மாணவிகளிடம் பாடம் நடத்தும்போது, ஆபாசமாகப் பேசி, மாணவிகளிடம் அத்துமீறி நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட மாணவிகள், மாவட்டக் கல்வி அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து, அதிகாரிகள் பள்ளிக்கு நேரில் வந்து பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். இதில், ஆசிரியர் சுரேஷ் மீதான குற்றச்சாட்டு, உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.



மேலும், பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் ஆசிரியரின் செயல்பாடு தொடர்பாகப் புகார் அளித்தனர். இது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள ஆசிரியரைத் தேடி வருகின்றனர்.

இதனிடையே, பள்ளி ஆசிரியரே வகுப்பறையில் மாணவிகளிடம் அத்துமீறி தவறாக நடந்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.