முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன், ஒரு மாத பரோலில் தற்போது வெளியே வந்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன், கடந்த 28 ஆண்டுகளாகச் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.

இதனிடையே, பேரறிவாளனின் தந்தை குயில்தான் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை பார்த்துக்கொள்ள, பேரறிவாளனுக்குத் தமிழக அரசு பரோல் வழங்கி உள்ளது.

அதன்படி, சென்னை புழல் சிறையிலிருந்து, வேலூர் சிறைக்குப் பேரறிவாளன் இன்று அழைத்துச் செல்லப்பட்டார். வேலூர் சிறைக்குச் சென்ற பின், அங்கு, பல்வேறு நிபந்தனைகளுடன் பரோல் வழங்கப்பட்டது.

இதனையடுத்து, பல்வேறு நிபந்தனைகளுடன் வேலூர் சிறையிலிருந்து ஒரு மாத பரோலில், பேரறிவாளன் தற்போது வெளியே வந்துள்ளார். பேரறிவாளனை, அவரது தாயார் அற்புதம்மாள், அங்கிருந்து அழைத்துச் சென்றார்.

கடந்த வருடம் பேரறிவாளனுக்கு 2 மாதங்கள் பரோல் வழங்கப்பட்ட நிலையில், தற்போது 2 வது முறையாக பல்வேறு நிபந்தனைகளுடன் அவருக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.