மாணவிகளைத் தவறான உறவுக்கு அழைத்த விவகாரத்தில் பேராசிரியர் நிர்மலா தேவி மீண்டும் கைது செய்யப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் செயல்பட்டு வரும் தேவாங்கர் கலைக்கல்லூரியில் பேராசிரியராக இருந்த நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான உறவுக்கு அழைத்த விவகாரத்தில் அதிரடியாகக் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வெளியே வந்தார்.

இதனிடையே தொடர்ந்து வழக்கு விசாரணையில் ஆஜராகி வந்த அவர், திடீரென்று மொட்டை அடித்து, தனது அடையாளத்தை மாற்ற முயன்றார். மேலும், அவர் சாமியாடியதாகக் கூறப்பட்ட விவகாரம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனைத்தொடர்ந்து, வழக்கு விசாரணையில் நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்து 2 முறை ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்பட்டது. மேலும், நிர்மலா தேவியை 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க, ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத்தொடர்ந்து சிபிசிஐடி போலீசார், நிர்மலா தேவியை மீண்டும் கைது செய்து, மதுரை மத்திய பெண்கள் சிறையில் அடைத்தனர்.