பாகிஸ்தானில் பாலியால் பலாத்காரம் செய்யப்பட்டு இந்து மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தான் கோட்கி டவுன் பகுதியில் செயல்பட்டு வரும் மருத்துவக் கல்லூரியில், பாகிஸ்தானைச் சேர்ந்த இந்து மாணவி நம்ரிதா சந்தனி, அங்குள்ள விடுதியில் தங்கிப் படித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் அவரது விடுதி அறையிலிருந்து மாணவி சடலமாக மீட்கப்பட்டார். இதனையடுத்து, மாணவி துப்பாட்டாவால் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டதாக, கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது. ஆனால், இதை நம்ப மறுத்த மாணவியின் உறவினர்கள், மாணவியின் சாவில் சந்தேகம் இருப்பதாகக் குற்றம்சாட்டினார்.

மேலும், மாணவியின் கழுத்து மற்றும் கை பகுதியில் ஒயரால் இறுக்கப்பட்ட தடங்கள் இருப்பதாகவும், இது குறித்த தகுந்த விசாரணை நடத்த வேண்டும் என்றும், மாணவியின் சகோதரர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனையடுத்து, மாணவியின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது, பிரேதப் பரிசோதனை அறிக்கையின் முடிவு வெளிவந்துள்ள நிலையில், அதில் பல்வேறு உண்மைகள் தெரியவந்துள்ளது.

பிரேதப் பரிசோதனை அறிக்கையின் படி, மாணவி மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளதாகவும், குறிப்பாக மாணவி உயிரிழப்பதற்கு முன்பு, அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. இதனால், மாணவியின் இறப்பைக் கொலை வழக்காகப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, பாகிஸ்தானில் இந்து மாணவி ஒருவர், பாலியால் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம், அந்நாட்டில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.