“என்னுடைய சொத்துகள் யாருக்குப் போய்ச் சேர வேண்டும் என உயில் எழுதிவிட்டேன்” என்று நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.

பெண்களைக் கடத்தியதாக நித்தியானந்தா மீது குஜராத் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஆனால், இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், நித்தியானந்தா ஆன்லைனில் தன்னுடைய பக்தர்களுக்குச் சத்சங்கம் பேசி வருகிறார்.

அதன்படி, அவர் சமீபத்தில் பேசி வெளியிட்டுள்ள வீடியோவில், தான் இறந்த பிறகு தன்னுடைய சொத்துக்கள் யாருக்குப் போய்ச் சேர வேண்டும் என்று தெளிவாக எழுதி வைத்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

அவர் பேசியுள்ள வீடியோவில், “மக்கள் எனக்குக் கொடுத்த, கொடுக்கின்ற, கொடுக்கப் போகின்ற எல்லா விதமான நன்கொடை, காணிக்கைகள், நிதிகள் எல்லாம் ; திருவண்ணாமலை குரு பரம்பரை, காஞ்சிபுரத்து குரு பரம்பரை, மதுரை குரு பரம்பரை ஆகிய 3 குரு பரம்பரைகளுக்குத் தான் போய்ச் சேர வேண்டும் என்று, நான் இப்போதே உயில் எழுதி வைத்து விட்டேன்” என்று கூறியுள்ளார்.

முன்னதாக, ஆசிரமத்தில் உள்ள சிறுமிகள் மற்றும் பெண்களைப் பணக்கார வீடுகளுக்கு யோகா பயிற்சிக்கு அனுப்புவதுபோல், அனுப்பி வைத்து நித்தியானந்தா கோடிக்கணக்கில் நிதியும், ஏக்கர் கணக்கில் நிலமும் பெற்றதாக அவருடைய பெண் சீடர் ஒருவர் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.