நித்தியானந்தா ஆசிரமத்தில் என்ன நடக்கிறது என்று மீட்கப்பட்ட சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார்.

நித்தியானந்தா சிறுமிகளைக் கடத்தியதாகப் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, அவர் தலைமறைவானார். இதனையடுத்து, அவர் கரீபியன் தீவில் பதுங்கி இருக்கலாம் என்றும் கூறப்பட்டது.

இவற்றைப்பற்றியெல்லாம் கவலைப்படாத அவர், வழக்கம்போல் தனது பக்தர்களுக்கு ஆன்லைன் மூலம் சொற்பொழிவு ஆற்றி வருகிறார்.

இதனிடையே, நித்தியானந்தா ஆசிரமத்தில் என்ன நடக்கிறது என்று அகமதாபாத் ஆசிரமத்திலிருந்து மீட்கப்பட்ட சிறுமி வரிசையாகப் பட்டியலிட்டுள்ளார்.

அதன்படி, “நாங்கள் நித்தியானந்தா குருகுலத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வரை இருந்தோம். அங்கு என் பெயர் நித்திய மயப் பிரியா. ஆரம்பத்தில், எல்லாமே ரொம்ப பிடித்துத்தான் அங்குச் சேர்ந்தோம். யோகா, பூஜைகள் என எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. சிறந்த முறையில் கல்வியும் இருந்தது.

இதனையடுத்து, 2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நாங்கள் குஜராத் ஆசிரமத்திற்கு மாற்றப்பட்டோம். அதன்பிறகு, நித்தியானந்தா சுவாமி எந்தெந்த வெளிநாடுகளுக்குப் போகிறார்களோ, அங்கெல்லாம் நாங்களும் சென்று வந்தோம்.

பின்னர், ஒரு கட்டத்திற்குப் பிறகு, நான் இந்தியாவிலிருந்தேன். எனது 2 அக்கா மட்டும் அவர்களுடன் மீண்டும் வெளிநாடுகளுக்குச் சென்றார்கள். அதில், நந்திகா அக்கா மட்டும் இந்தியா திரும்பிய நிலையில், தத்துவப்பரியா அக்கா இந்தியா திரும்பவில்லை. இது தொடர்பாக நான் கேட்டதற்கு, அவர் நித்தியானந்தா சுவாமியுடன் சென்றுவிட்டதாகத் தெரிவித்தார்கள்.

என் நந்திகா அக்கா, நிகழ்ச்சிகள் நடத்துவதில் தலைமை நிர்வாகி. அந்த நேரத்தில் எங்களுக்கு அதிக சக்திகள் இருந்ததால், நாங்கள் பலரிடம் சென்று, பணம் இடம் என பலவற்றையும் வாங்கி, நித்தியானந்தா சுவாமியிடம் கொடுத்தோம். அதன்பிறகு, அப்பா - அம்மாவிடம் பேசக்கூடாது, பார்க்கக்கூடாது என்று நந்திகா அக்காவிற்கு பல்வேறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டது. அப்போதுதான் பிரச்சனை எழுந்தது.

தொடர்ந்து, எங்களுக்குச் சக்திகளைக் கற்றுக்கொடுப்பதாகக் கூறி, பயிற்சிகள் கொடுத்தார்கள். நாங்களும் நிறையச் சக்திகளைக் கற்றுக்கொண்டோம். அதன்பிறகு பல்வேறு விஐபிகள், சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என பல்வேறு தரப்பினரையும் சந்தித்து நிதி திரட்டினோம். எங்களுக்கு 8 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதனால், பாத பூஜை, பரிகாரம் என அனைத்திற்கும் பணம் பெற்றோம். நிறையப் பேரிடமிருந்து இடத்தையும் பெற்றுக்கொண்டோம்.

அதன்பிறகுதான் எங்களுக்கு பல்வேறு கேள்விகள் எழ ஆரம்பித்தன. ஆண்டாள் விவகாரத்தில் என் அக்கா பேசியது எல்லாம், நித்தியானந்தா சுவாமி சொல்லிக்கொடுத்தது தான். குறிப்பாக, என் அக்காவைப் பிரதமராக மாற்றிக் காட்டுகிறேன் என்று நித்தியானந்தா சுவாமி சபதம் எடுத்திருக்கிறார். நித்தியானந்தா சுவாமி பெண்களிடம் நடந்துகொள்வது பற்றி என்னால் எதுவும் சொல்ல முடியாது.” என்று அவர் பேசியிருக்கிறார்.

தற்போது, இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனால், நித்தியானந்தாவிற்கும் மேலும் நெருக்கடி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.