மனைவியை வித்தியாசமாகக் கொல்ல முயன்ற கணவனை 5 மாதமாகத் தேடிப்பிடித்து போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் ராமாபுரபுதூர் அன்பு நகர்ப் பகுதியைச் சேர்ந்த ரூபிகாவிற்கும், கரூர் மாவட்டம் மூலி மங்களத்தைச் சேர்ந்த சிவப்பிரகாசத்திற்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு தற்போது ஒரு மகன் உள்ளார்.

இதனிடையே, திருமணத்திற்குப் பிறகு கணவன் மனைவி இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை வந்துள்ளது. ஒருகட்டத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்த நிலையில், ரூபிகா நாமக்கல்லில் உள்ள தனது அம்மா வீட்டிற்குச் சென்றுவிட்டார்.

நீண்ட நாட்களாக இருவரும் பிரிந்திருந்த நிலையில், கடந்த ஜூன் 23 ஆம் தேதி, மனைவியைப் பார்க்க அவரது வீட்டிற்கு வந்த கணவர் சிவப்பிரகாசம், ரூபிகாவை சமாதானம் செய்ய முயன்றுள்ளார். ஆனால், அவர் சமாதானம் ஆகாததால், ஆத்திரமடைந்த சிவப்பிரகாசம், தனது மனைவியை வித்தியாசமாகக் கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

அதன்படி, மனைவி வீட்டின் அருகில் உள்ள மின்மாற்றியிலிருந்து, திருட்டுத் தனமாக மின்சாரம் எடுத்து, வீட்டின் பின் பக்க ஜன்னலில் இணைத்து மனைவியைக் கொலை செய்யத் திட்டமிட்டு, இணைப்பு கொடுத்துவிட்டுத் தலைமறைவானார்.

இதனிடையே, வீட்டின் பின்புறம் சென்ற மருமகனை நீண்ட நேரமாகியும் காணவில்லை என்பதால், அவரைத் தேடி அவரது மாமியார் வளர்மதி வீட்டின் பின்புறம் தேடி வந்துள்ளார். அப்போது, அங்கே நிறைய மின் ஒயர்கள் கீழே கிடந்துள்ளது. மேலும், வீட்டின் ஜன்னல் கம்பியில் மின்சார ஒயர் பொருத்தப்பட்டு, அந்த ஒயர் வீட்டின் அருகில் உள்ள மின்மாற்றியிலிருந்து வருவதும் தெரியவந்தது.

இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை துண்டித்துவிட்டு, மருமகன் பற்றி அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மனைவியைக் கொலை செய்ய முயன்றது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், கடந்த 5 மாதங்களாகச் சிவப்பிரகாசத்தைத் தேடி உள்ளனர்.

இந்நிலையில், பெங்களூருவில் உள்ள ஐ.டி.நிறுவனத்தில் பணியாற்றி வந்த சிவப்பிரகாசத்தை, நாமக்கல் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து, சிறையில் அடைத்தனர். இதனிடையே, சிவப்பிரகாசம் கடந்த 2018 ஆம் ஆண்டு தனது மானார் தங்கவேலுவை கொலை செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கு ஒன்று, நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.