மேட்டுப்பாளையத்தில் 17 பேரைக் காவு வாங்கி சுற்றுச்சுவரைக் கட்டிய வீட்டின் உரிமையாளர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.

கடந்த சில வாரங்களாகத் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதன்படி கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்கியது. அப்போது, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த நடூர் பகுதியில், தொடர்ந்து பெய்த கனமழையால், அப்பகுதியில் வீட்டைச் சிற்றியிருந்த சுற்றுச்சுவர், திடீரென்று விழுந்துள்ளது.

இடிந்த சுற்றுச்சுவர், அருகிலிருந்த சில வீடுகள் மீது விழுந்துள்ளது. அப்போது, வீட்டிலிருந்த 17 பேர் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், சிலர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து, அவர்கள் மீட்கப்பட்டு, படுகாயம் அடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சுற்றுச்சுவரைக் கட்டிய வீட்டின் உரிமையாளர் சிவசுப்பிரமணியத்தை கைது செய்தனர். இதனையடுத்து, அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், முற்றிலுமாக சிதிலமடைந்து எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையிலிருந்த சுற்றுச்சுவரை அகற்றக்கோரி, அப்பகுதி மக்கள் பலமுறை வீட்டின் உரிமையாளரிடம் கோரிக்கை வைத்தும், அவர் அதனைக் கண்டுகொள்ளவில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.