மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது.

மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், அந்த மாநிலத்தில் யார் ஆட்சி அமைப்பது என்பதில், தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது.

முதலில், பாஜகவை ஆட்சி அமைக்க வருமாறு, மகாராஷ்டிரா ஆளுநர் கோஷியாரி அழைப்பு விடுத்தார். ஆனால், போதிய ஆதரவு இல்லை என்று பாஜக பின்வாங்கியது. இதனால், 2 வது பெரிய கட்சியான சிவசேனாவை ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் கேட்டுக் கொண்டார்.

அப்போது, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியமைக்க சிவசேனா முயற்சி மேற்கொண்டது. அந்த நேரத்தில், மத்திய அமைச்சரவையிலிருந்து சிவசேனா விலகியது. அதே நேரத்தில் அந்த கட்சிக்கு வழங்கப்பட்ட அவகாசம் முடியும் முன், ஆளுநரைச் சந்தித்த சிவசேனா மேலும் கால அவகாசம் கேட்டது. ஆனால், ஆளுநர் கால அவகாசம் தர மறுத்துவிட்டார்.

இதனையடுத்து, அம்மாநிலத்தின் 3 வது பெரிய கட்சியான தேசியவாத காங்கிரஸை ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதனால், தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் சிவசேனா ஆகிய 3 கட்சிகளும் இணைந்து ஆட்சியமைப்பது தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தை நடந்த நிலையில், எந்த முடிவும் எட்டப்படாமல் இழுபறி நீடித்தது.

இதனிடையே, குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த ஆளுநர் கோஷியாரி, மத்திய அமைச்சரவைக்குப் பரிந்துரை செய்தார். இதனால், பிரதமர் மோடி பிரேசில் நாட்டிற்குச் செல்லும் முன்பு, அவர் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அப்போது, மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு அவர் ஒப்புதல் அளித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து, மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டு, குடியரசுத் தலைவருக்கும், உள்துறை அமைச்சகத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு, குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார். இதன் காரணமாக, மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி தற்போது அமல் படுத்தப்பட்டுள்ளது.

அதனிடையே, மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்ததை எதிர்த்து, சிவசேனா கட்சி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.