காதல் வலையில் சிக்க வைத்து பிரபல ரவுடியை கைது செய்த தில்லான பெண் எஸ்.ஐ.க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

மத்தியதேசம் மாநிலம், மஹாப்பா மாவட்டத்தில் உள்ள பிஜோரி பகுதியைச் சேர்ந்த பால்கிஷ்ன் சவுபே மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட மொத்தம் 16 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால், அவரிடம் போலீசாரால் கிட்டக் கூட நெருங்க முடியவில்லை.

தொடர்ந்து தனது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டு இருந்துள்ளார். இவரைப் பிடிக்க போலீசார் பல்வேறு முயற்சிகள் எடுத்தும் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில், அங்குள்ள காவல் நிலையத்திற்குப் புதிதாக மாற்றலாகி வந்த பெண் எஸ்.ஐ. ஒருவர், பிரபல ரவுடி பால்கிஷ்ன் சவுபேவின் புதிய செல்போன் நம்பரை முதலில் கண்டுபிடித்துள்ளார்.

பின்னர், ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைபார்க்கும் ஒரு இளம் பெண்ணின் பெயரில் புதிய சிம்கார்ட் ஒன்றை வாங்கி, அதிலிருந்து ராங் நம்பர் போல், பெண் எஸ்.ஐ. அவரிடம் பேசிவிட்டு, போனை வைத்துள்ளார்.

இதனால், சந்தேகமடைந்த ரவுடி, அந்த நம்பரை செக் பண்ணிப் பார்த்ததில், அது தனியார் நிறுவனத்தில் வேலைபார்க்கும் இளம் பெண் ஒருவருடைய நம்பர் என்பதை உறுதி செய்தார்.

இதனையடுத்து, சில நாட்கள் கழித்து, மீண்டும் பெண் எஸ்.ஐ. அந்த நம்பருக்கு போன் செய்து கடலைப் போடுவது போல் பேசி, அவரை தன் வழிக்குக் கொண்டு வந்துள்ளார்.

இப்படியாக, இருவரும் போனில் அடிக்கடி பேசி வந்துள்ளனர். ஒருநாள் “நாம் திருமணம் செய்துகொள்வோமா?!” என்று அந்த பெண் எஸ்.ஐ. கேட்க, அதற்கு, “நாம் முதலில் நேரில் சந்திப்போம்” என்று அந்த ரவுடி பதில் அளித்துள்ளார். அதன்படி இருவரும் ஒரு குறிப்பிட்ட கோயிலில் சந்திப்பதாகப் பேசிக்கொண்டனர்.

அதன்படி, குறிப்பிட்ட கோயிலுக்கு முன்னதாக பல்வேறு போலீசார் மப்டியில் வந்து அங்கேயும், இங்கேயுமாக நின்றுள்ளனர். அப்போது, அந்த ரவுடி அங்கு வந்துள்ளார். ஆனால், அந்த பெண் வரவில்லையே என்று அந்த நம்பருக்கு போன் செய்துள்ளார்.

அப்போது, அங்கு பொதுமக்கள் போல் நின்ற போலீசார், அவனை மடக்கிப் பிடித்து கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

இதனிடையே, வித்தியாசமான ஸ்டைலில் பெண் எஸ்.ஐ. அவரை கைது செய்தமைக்கு, போலீஸ் உயர் அதிகாரிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் பராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.