“சீமான் தான் தமிழ் தாயின் மூத்த பிள்ளை என்றால், நாங்கள் எல்லாம் அமெரிக்க காரனுங்களுக்கா பிறந்தோம்?” என்று ரஜினி பிறந்த நாள் விழாவில் நடிகர் ராகவா லாரன்ஸ் கொந்தளித்தார்.

நடிகர் ரஜினிகாந்தின் 70வது பிறந்தநாள் விழா, தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குனர் எஸ்.பி. முத்துராமன், இயக்குநர்கள் பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார், நடிகர் ராகவா லாரன்ஸ், நடிகை மீனா, கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ், தொடர்ந்து ரஜினியின் அரசியல் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை கடுமையாக விமர்சித்து அனல் பறக்கப் பேசினார்.

அதன்படி, “அரசியல் என்னும் ஓட்ட பந்தயத்தில் எல்லோருமே ஓடி அதில் வெற்றி பெறுவதுதான் ஆம்பள. தான் மட்டுமே ஓட வேண்டும் என்று நினைப்பவர்களை என்ன சொல்வது?” என்று கட்டாமாகக் கடுகடுத்தார்.

மேலும், “மேடையில் தனி மனித தாக்குதல் வேண்டாம்” என்று சுட்டிக்காட்டிய அவர், “தான் திட்ட வரவில்லை என்றும் திருத்த வந்துள்ளேன்” என்றும் சுட்டிக்காட்டினார்.

தான் பெயரைச் சொல்ல விரும்பவில்லை என்று கூறி, வரிசையாகச் சீமானைப் பற்றியே பேசிய அவர், ஒரு கட்டத்தில் “சீமான் அண்ணா“ என்று குறிப்பிட்டார். அப்போது, “அவர் பெயரைக் கூற வேண்டாம் என்று ரசிகர்கள் சத்தமாகக் கத்தி ஆர்ப்பரித்தனர். ரசிகர்களின் ஆவேசத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் நின்ற லாரன்ஸ், “சரி இனி சொல்லவில்லை” என்று, தன் பேச்சைத் தொடர்ந்தார்.

குறிப்பாக, “தர்பார் பட இசை வெளியீட்டு விழாவில், கமல் குறித்துத் தான் பேசியது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாகவும்” விளக்கம் அளித்தார். “அதற்காக, தான் கமலிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும்” நடிகர் ராகவா லாரன்ஸ் கூறினார்.

அடுத்ததாகப் பேசிய கராத்தே தியாகராஜன், “ரஜினி தான் அடுத்த முதலமைச்சராக வருவார், 2021 ஆம் ஆண்டு கோட்டையில் ரஜினி கொடியேற்றுவார்” என்றும் கஜர்சித்தார்.