காதல் தோல்வியில் பெண் போலீஸ் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால், போலீசார் ஒன்றிணைந்து ஜோடிக்குத் திருமணம் செய்துவைத்து அழகுபார்த்த சுவாரசியமான நிகழ்வு நடந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பாண்டுரங்கன் தொட்டி கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் நதியாவும், அதே ஊரைச் சேர்ந்த கண்ணன் என்ற இளைஞரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாகக் காதலித்து வந்துள்ளனர்.

இளம் பெண் நதியா, திருப்பூர் ஆயுதப் படையில் காவலராக உள்ள நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறையில் டாக் ஸ்குவாட் பிரிவில் காவலராகக் கண்ணன், பணியாற்றி வருகிறார்.

இருவரும் காவலர்கள் என்பதாலும், இருவரும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும், திருமணத்தில் தடை எதுவும் இருக்காது என்று நம்பி, இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கண்ணன், நதியாவை திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இதனால், அதிர்ச்சியடைந்த நதியா, எறும்பு சாக்பீஸை தின்று தற்கொலைக்கு முயன்றார். பின்னர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தார்.

இதனையடுத்து, பெண் காவலர் நதியா தற்கொலை விவகாரத்தில் தலையிட்ட தேன்கனிக்கோட்டை டி.எஸ.பி. சங்கீதா மற்றும் காவல் நிலையத்தில் பணியாற்றும் போலீசார் அனைவரும் சேர்ந்து கண்ணனைத் திருமணத்திற்குச் சம்மதிக்க வைத்தனர்.

இதனையடுத்து, காதல் ஜோடி இருவருக்கும் தேன்கனிக்கோட்டை நரசிம்மர் கோயிலில் டி.எஸ.பி. சங்கீதா தலைமையில், மற்ற போலீசார் புடை சூழ மிகவும் விசேசமாகத் திருமணம் நடைபெற்றது.

புதுமண தம்பதிகளுக்கு டி.எஸ.பி. சங்கீதா உட்பட தேன்கனிக்கோட்டை போலீசார் அனைவரும் வாழ்த்துக்கள் கூறி, பரிசுகளை வழங்கினார்.

இதனிடையே, காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயன்ற பெண் காவலரின் சொந்த வாழ்க்கையில், தலையிட்டு, காதலனோடு திருமணம் செய்து வைத்த டி.எஸ.பி.சங்கீதாவுக்கு தற்போது சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.