காதலித்த பெண் போலீசை, ஆண் போலீஸ் கழட்டி விட்டதால், மனமுடைந்த அவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பாண்டுரங்கன் தொட்டி கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் நதியா, அதே ஊரைச் சேர்ந்த கண்ணன் என்ற இளைஞரைக் காதலித்து வந்துள்ளனர்.

இளம் பெண் நதியா, திருப்பூர் ஆயுதப் படையில் காவலராக உள்ளார். அதேபோல், கண்ணன், கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறையில் டாக் ஸ்குவாட் பிரிவில் காவலராக பணியாற்றி வருகிறார்.

இருவரும் போலீஸ் என்பதாலும், இருவரும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும், திருமணத்தில் தடை எதுவும் இருக்காது என்று நம்பி, இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக நெருங்கிப் பழகி வந்தனர். இருவரும் சேர்ந்து பல்வேறு பகுதிகளுக்குத் தனிமையில் சுற்றுலா சென்று வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், மனம் மாறிய கண்ணன், நதியாவை திருமணம் செய்ய மறுத்ததால், எறும்பு சாக்பீஸை
தின்று நதியா தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் அருகில் உள்ள அஞ்செட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், உயர் சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெண் போலீஸ் நதியா தற்கொலைக்கு முயன்றது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, “கண்ணனைக் காதலித்த இந்த 3 வருட காலத்தில், 3 முறை கருக்கலைப்பு செய்ததாகவும், அதனால் தன்னுடைய கேரக்டர் சரியில்லை என்று கண்ணன் என்னைத் திருமணம் செய்துகொள்ள மறுப்பதாகவும்” நதியா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போலீசார், கண்ணனிடமும் விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, காதலிக்கும் போதே 3 முறை கருக்கலைப்பு செய்யப்பட்ட நிலையில், பெண் போலீசை ஆண் போலீசே, கழட்டிவிட்ட சம்பவம் தற்போது பேசப்பட்டு வருகிறது.