ஐதராபாத்தில் ரயில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

கோவையிலிருந்து ஐதராபாத் வழியாக டெல்லி நிஸாமுதீன் செல்லும் கொங்கு எக்ஸ்பிரஸ் ரயிலானது, ஐதராபாத் அருகில் உள்ள “கச்சிகுடா” ரயில் நிலைய பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தது. அப்போது, சில பயணிகள் ரயிலிலிருந்து இறங்கிக்கொண்டும், பல பயணிகள் ரயிலில் ஏறிக்கொண்டும் இருந்தனர்.

அப்போது, யாரும் எதிர்பாராத நிலையில், அதே தண்டவாளத்தில் புறநகர் மின்சார ரயில் வந்துள்ளது. அந்த ரயில், கண் இமைக்கும் நேரத்தில் கொங்கு எக்ஸ்பிரஸ் ரயில் மீது பலமாக மோதியுள்ளது. இதில், 2 ரயில்களிலும் சேர்த்து 20 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இதனையடுத்து, படுகாயம் அடைந்த அனைவரையும் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அவசரமாக அனுமதித்தனர். அங்கு, அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, ரயில் நிலைய பிளாட்பாரத்தை கடந்து சென்றதால், புறநகர் மின்சார ரயில் மெதுவாகச் சென்றுள்ளது. இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுவே ரயில் நிலையம் இல்லாத மற்ற புறநகர்ப் பகுதியாக இருந்திருந்தால், இந்த விபத்தில் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவுக்கு மிகப் பெரிய உயர் சேதம் ஏற்பட்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

மேலும், ரயில் விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், இந்த விபத்தானது, சிக்னல் கோளாறு காரணமாக நிகழ்ந்திருக்கலாம் என்றும் முதல்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர். விபத்துக் காரணமாக, அந்த வழியாகச் செல்ல வேண்டிய மற்ற ரயில்கள் எல்லாம் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, ஒரே தண்டவாளத்தில் 2 ரயில்கள் மோதிகொண்ட நிகழ்வு, கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.