ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நெஞ்சை உரைய வைத்துள்ளது.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை பூர்வீகமாக கொண்ட உத்திராபதி, தனது மனைவி சங்கீதா மற்றும் 18 வயது மகள் அபிநயஸ்ரீ, 13 வயது மகன் ஆகாஷ் ஆகியோருடன், கடந்த 8 ஆண்டுகளாகத்திருச்சியில் வசித்து வந்துள்ளார்.

திருச்சியில் மருந்து விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வந்த உத்திராபதிக்கு, கடன் சுமை அதிகமானதாகக் கூறப்படுகிறது. இதனால், அவர் கடந்த சில வாரங்களாக கடும் மன உலைச்சலில் இருந்ததாகவும் தெரிகிறது.

இதனையடுத்து, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ரோடு ரயில் நிலையத்திற்கு குடும்பத்துடன் வந்த அவர், அங்குள்ள தண்டவாளத்தில் அமர்ந்து கணவன் - மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் பேசிக்கொண்டிருந்தார்.

இதனை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் பார்த்தபடி, அந்த இடத்தை கடந்து சென்றனர். ஆனால், அடுத்த சில நிமிடங்களில் ரயில் வரவே, 4 பேரும் அங்கிருந்து எழுந்திருக்காமல், அங்கேயே அமர்ந்துள்ளனர். இதில், 4 பேரும் ரயிலில் அடிபட்டு, உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இது குறித்து விரைந்து வந்த போலீசார், வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது, கடன் சுமையாலே, அவர் தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் முதல் கட்ட விசாரணையில் தெரிவித்தனர்.