கன்னியாகுமரியில் உள்ளாடையுடன் பொதுமக்களில் இருவரை போலீசார் தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

கன்னியாகுமரியில் போலீசார் சிலர், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாகச் சென்ற வாகனங்களை வழிமறித்து ஆவணங்களை கேட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சகாய வால்டர், ஜோசப் ரவீந்திரன் ஆகிய இருவரும் அந்த வழியாக டூவிலரில் வந்துகொண்டிருந்தனர். அவர்களைத் தடுத்து நிறுத்திய போலீசார், மிரட்டும் தோனியில் ஆவணங்களை கேட்டதாகத் தெரிகிறது. இதனால், போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, சக பொதுமக்கள் முன்னிலையில், இருவரையும் போலீசார் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர். அப்போது, அதில் ஒருவருக்கு வேஷ்டி அவிழ்ந்து கீழே விழுந்து, அவர் ஜட்டியுடன் காணப்பட்டுள்ளார். ஆனால், அதையும் பொருட்படுத்தாத போலீசார், அவரை ஜட்டியுடனே நிற்க வைத்து, லத்தியால் தாக்கி, அப்படியே, அவரை குண்டுக்கட்டாக தூக்கிக்கொண்டும், மற்றவரை தரதரவென இழுத்துச் சென்றும் போலீஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.

இதனிடையே, காவலர்களின் இந்த நடவடிக்கை அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே, பொதுமக்களை ஜட்டியுடன் நிற்க வைத்து போலீசார் தாக்கும் வீடியோ, தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

மேலும், பொது இடத்தில் ஜட்டியுடன் நிற்க வைத்து தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை பாயும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.