நம் வீடே அலுவலகம்.. இணையமே சந்திப்பு அறை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ், உலகத்தையே மாற்றிப் புரட்டிப்போட்டுள்ளது. குறிப்பாக, உலக நாடுகளின் பொருளாதாரம் கடுமையாகச் சரிந்து, பொதுமக்களின் வாழ்வாதாரம் அடியோடு ஆட்டக் கண்டுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக தமது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, “கொரோனா வைரஸ், நமது தொழில்முறை வாழ்க்கையையே முற்றிலுமாக மாற்றி விட்டது என்றும், இப்போதெல்லாம் நமது வீடே அலுவலகமாகவும், இணையதளமே சந்திப்பு அறையாகவும் திகழ்கிறது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

“இதனால், நானும் இந்த மாற்றங்களுக்கு ஏற்ப, என்னையே நான் மாற்றிக் கொண்டுள்ளேன்” என்றும் கூறியுள்ளார்.

“எனது அமைச்சரவையும் சரி, பிரதமர் அலுவலக அதிகாரிகளும் சரி, உலக தலைவர்களானாலும் சரி, எல்லாரிடமும் காணொலி காட்சி மூலம் தான், நான் சந்திப்பை நடத்தி வருகிறேன்” என்றும் தெரிவித்துள்ளார்.

“இதனால், மிக சிக்கலான தருணங்களில் கூட, நமது அலுவலகங்கள், வர்த்தகம் ஆகியவை வேகமாக இயங்க முடியும் என்பது தெளிவாகிறது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

“இன்று உலகமே வர்த்தக முன்னுதாரணத்தைத் தேடி, ஓடி கொண்டிருக்கிறது என்றும், கண்டுபிடிப்புகளுக்குப் பெயர் போன இளம் இந்தியா, புதிய பணி கலாச்சாரத்துக்கும் தலைமை தாங்க முடியும்” என்றும் பிரதமர் மோடி நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

“கொரோனாவுக்கு பிந்தைய சூழ்நிலையில், நவீன பன்னாட்டுப் பொருள் வினியோக சந்தையில், உலகளாவிய மையமாக இந்தியா திகழ முடியும் என்றும், இந்த வாய்ப்பை நாம் நழுவ விடாமல் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றும் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

குறிப்பாக, “பணியிடங்களில் டிஜிட்டலுக்குத்தான் முதலிடம் அளிக்கப்படுகிறது என்றும், தொழில்நுட்ப புரட்சிகள், ஏழைகளின் வாழ்க்கையில் கூட மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது” என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

“கொரோனாவை தடுக்க நாம் அனைவரும் ஒற்றுமையுடன், சகோதரத்துவத்துடன் இருக்க வேண்டும்” என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.