இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இருநாட்டு கேப்டன்களும் 'கோல்டன் டக்'வுட்டான அரிய நிகழ்வு நிகழ்ந்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 4 விக்கெட் இழப்புக்கு 387 ரன்களை அதிரடியாகக் குவித்தது.

இந்திய அணியின் தொடக்க வீரர்களாகக் களமிறங்கிய கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா இருவரும் ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.

அதன்படி, 34 வது ஓவரில் ரோஹித் சர்மா ஒருநாள் போட்டியில் தனது 28 வது சதத்தைப் பதிவு செய்தார். இதனையடுத்து, கே.எல்.ராகுல் 36 வது ஓவரில் தனது 3 வது ஒருநாள் சதத்தைப் பதிவு செய்தார்.

இதனிடையே, இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடி முதல் விக்கெட்டுக்கு 227 ரன்களை சேர்த்த நிலையில், கே.எல்.ராகுல் 102 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் கோலி பொல்லார்ட் பந்துவீச்சில் டக் அவுட் ஆனார்.

இதனையடுத்து, வெஸ்ட் இண்டீஸின் பந்துவீச்சாளர்களை பவுண்டரிகளும், சிக்சர்களுமாக ரோஹித் சர்மா அடித்து அட்டாசகப்படுத்தினார்.

இந்த போட்டியில் அவர் மீண்டும் இரட்டை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 44 வது ஓவரில், அவர் கேட்சாகி, 159 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் இருவரும் போட்டிப்போட்டுக்கொண்டு வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சை 'சும்மா கிழி'த்தெடுத்தனர்.

குறிப்பாக, 45, 46 வது ஓவரை எதிர்கொண்ட ரிஷப் பந்த் 4 சிக்சர்கள், 3 பவுண்டரிகள் என 38 ரன்களை சேர்த்தார். மறுமுனையில் அபாரமாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர், 47 வது ஓவரில் 4 சிக்சர்கள், ஒரு பவுண்டரி என 31 ரன்களை சேர்த்தார். இந்த ஜோடி 24 பந்துகளில் 72 ரன்களை சேர்த்த நிலையில், ரிஷப் பந்த் 39 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர், 53 ரன்கள் எடுத்திருந்த ஸ்ரேயாஸ் ஐயர், 49 வது ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். இதனால், இந்திய அணி 50 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து, அதிகபட்சமாக 387 ரன்களை குவித்தது.

அதன்பின் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, தொடக்கம் முதலே சரசரவென்று விக்கெட்டுகள் விழத்தொடங்கின. அதேபோல், வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்ட், டக் அவுட் ஆனார். இதனால், இருநாட்டு கேப்டன்களும் நேற்றைய போட்டியில் 'கோல்டன் டக்'வுட்டானார்கள்.

இதனிடையே, வெஸ்ட் இண்டீஸ் அணி 280 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், 107 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.