இந்துக்கள் திருமாவளவனை எங்குப் பார்த்தாலும் அடியுங்கள் என்று நடிகை காயத்ரி ரகுராம் சர்ச்சைக்குரிய வகையில் டிவிட் செய்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அமைப்பு சார்பில், சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி., அயோத்தி வழக்கில் வழங்கப்பட்ட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து, தனது கருத்தைத் தெரிவித்திருந்தார்.

அப்போது, பாபர் மசூதி இருந்த இடத்தில் அகழ்வாராய்ச்சி நடத்தியதில் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதை வைத்து, அது இந்து கோயிலிருந்த இடம் என்றோ, தேவாலயம் இருந்த இடம் என்றோ, மசூதி இருந்த இடம் என்றோ கூற இயலாது என்று குறிப்பிட்டிருந்தார். அத்துடன், கண்டெடுக்கப்பட்ட அந்த பொருள் கூம்பு போல் இருந்தால், அந்த இடத்தில் கிறிஸ்தவ ஆலயம் இருந்திருக்கும் என்றும், குவி மாடமாக இருந்தால் அங்கு மசூதி இருந்திருக்கலாம் என்றும், அசிங்கமான பொம்மைகள் இருந்திருந்தால், அந்த இடத்தில் இந்து கோயில்கள் இருந்திருக்கும் என்றும் கூறியிருந்தார்.

இந்த கருத்துக்குச் சிலர் எதிர்ப்புத் தெரிவித்ததால், தான் பேசியதற்கு மனம் வருந்தி அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டிருந்தார். அந்த கருத்தையும், அவர் திரும்பப் பெற்றுக்கொண்டார்.

இந்நிலையில், இது தொடர்பாகத் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகை காயத்ரி ரகுராம், “இந்துக்கள் அனைவரும் திருமாவளவனை எங்குப் பார்த்தாலும் அடியுங்கள்” என்று சர்ச்சைக்குரிய வகையில், சம்பந்தமே இல்லாமல் பதிவிட்டுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த அவரது ஆதரவாளர்கள், பேரணியாகச் சென்று காயத்ரி ரகுராம் வீட்டை முற்றுகையிட முயன்றனர். ஆனால், அதற்குள் விரைந்து வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவரைக் கைது செய்தனர்.

இதனிடையே, காயத்ரி ரகுராமிற்கு தொலைப்பேசி மூலம் நிறைய மிரட்டல் போன்கள் வருவதாகக் கூறி, அவற்றை வீடியோவாக எடுத்து, தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், இது குறித்துத் திறந்த வெளியில் விவாதிக்க தயாரா என்றும், தேதியையும், நேரத்தையும் குறிப்பிட்டு, அவர் திருமாவளவனுக்கு டிவிட்டர் மூலம் சவால் விடுத்துள்ளார். இதனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.