சென்னை ஐ.ஐ.டி.யில் கடந்த ஒரே வருடத்தில் 5 பேர் தற்கொலை செய்துகொண்டதாக வெளியாகி உள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை ஐ.ஐ.டி.யில் கடந்த வாரம்ஃபாத்திமா லத்தீஃப் தற்கொலை செய்து கொண்ட விவகாரம், தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் நேற்று நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.

இந்நிலையில், கடந்த ஓராண்டில் மட்டும் சென்னை ஐ.ஐ.டி.யில் கல்வி பயின்று வந்த மாணவர்கள் 5 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதன்படி, சென்னை ஐ.ஐ.டி.யில் இயற்பியல் துறையில் உதவி பேராசிரியையாக பணிபுரிந்து வந்த, பெங்களூருவைச் சேர்ந்த 45 வயதான அதிதி சின்ஹா, கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வழக்கு விசாரணையில், அவர் குடும்ப பிரச்சனை காரணமாகத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது.

சென்னை ஐ.ஐ.டி.யில் பி.ஹெச்.டி. படித்து வந்த, ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 25 வயதான ரஞ்சனா குமாரி, கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து, எந்த தகவலும் வெளியே கசியாமல், நிர்வாகம் பார்த்துக்கொண்டது.

ஐ.ஐ.டி.யில் எம்.டெக். முதலாமாண்டு படித்து வந்த உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர் கோபால் பாபு, கடந்த ஜனவரி மாதம் 28 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அதன் பிறகு, இந்த வழக்கில் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

கேரளாவைச் சேர்ந்த மாணவர் ஷஹர் கொர்மாத், ஐ.ஐ.டி.யில் எம்.டெக். இறுதி ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதன் தொடர்ச்சியாகத் தான், கேரளாவைச் சேர்ந்த ஃபாத்திமா லத்தீஃப் என்ற மாணவி, கடந்த 9 ஆம் தேதி சென்னை ஐ.ஐ.டி.யில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்போது, அது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

மாணவி ஃபாத்திமா லத்தீஃப், தற்கொலை செய்து கொள்ளும் முன், தனது பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்பி வைத்துவிட்டு, அதன் பிறகே தற்கொலை செய்துகொண்டார். அதனாலேயே, இந்த விவகாரம், இவ்வளவு தூரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இல்லையென்றால், இதற்கு முன் தற்கொலை கதைகள் எப்படி வெறும் வழக்குகளாக எண்ணிக்கையின் அடிப்படையில் சேர்க்கப்பட்டதோ, அப்படியே, இந்த வழக்கும் ஆகியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.