17 வயது பெண்ணை திருமணம் செய்தவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த சூசையபுரம் பகுதியைச் சேர்ந்த லியோ பிரசாந்த், அதேபகுதியைச் சேர்ந்த தனிஸ்லாஸ் என்பவரின் மகள் 17 வயதுடைய மரியநேகாவை காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 16 ஆம் தேதி இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி, உறவினர் ஒருவரின் துணையுடன் திருமணம் செய்துகொண்டனர். இதனையடுத்து, சொந்த ஊர் திரும்பிய இருவரையும் மரியநேகாவின் பெற்றோர்கள் ஏற்றுக்கொண்டனர். ஆனால், லியோ பிரசாந்த்தின் பெற்றோர் இத்திருமணத்திற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து கடந்த 24 ஆம் தேதி மரியநேகாவின் வீட்டிலிருந்து வெளியே சென்ற லியோ பிரசாந்த், வீடு திரும்பவில்லை.

இதனால், அதிர்ச்சியடைந்த மரியநேகா, தன் காதல் கணவனுடன் ஒன்றாகச் சேர்த்து வைக்கக்கோரி, அங்குள்ள பேருந்து நிலையத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இது தொடர்பாக விரைந்து வந்த போலீசார், போராட்டத்திற்கான காரணம் குறித்து புகார் அளிக்கச் சொல்லி, தர்ணா போராட்டத்தைக் கைவிடுமாறு அறிவுறுத்தினர். அதன்படி, தர்ணா போராட்டத்தைக் கைவிட்டு, காதல் கணவரைச் சேர்த்து வைக்ககோரி, மகளிர் காவல் நிலையில் அந்த பெண் புகார் அளித்தார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், லியோ பிரசாத்தைத் தேடி வந்தனர். இந்நிலையில், சூசையபுரத்தில் உள்ள அவரது வீட்டில், லியோபிரசாத் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இது தொடர்பாக விரைந்து சென்ற போலீசார், லியோ பிரசாத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் சிறையில் அடைத்தனர்.