பள்ளி மாணவியைப் பலாத்காரம் செய்த காமகொடூரனுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த 8 ஆம் வகுப்பு மாணவிக்கு, அதே பகுதியைச் சேர்ந்த சாரு, அடிக்கடி இரட்டை அர்த்தங்கள் பேசி கேலி செய்து வந்ததாகத் தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த அந்த மாணவி, அவரை திட்டி விட்டு சென்றுள்ளார். 

மாணவி திட்டியதால், கோபமடைந்த அவன், “உன்னைத் தூக்கிச் சென்று பலாத்காரம் செய்துவிடுவேன்” என்று மிரட்டியதாகக் கூறப்படுகிறது. அதற்கு மாணவியும் பதில் பேச, அவன் சொன்னபடியே, மாணவியைத் தூக்கிச் சென்று மிரட்டியும், அடித்தும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

இதனையடுத்து, அவனிடமிருந்து மீண்டு வந்த மாணவி, தனக்கு நேர்ந்த அவலங்களைத் தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், சத்தியமங்கலம் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், குற்றவாளி சாருவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 

ஈரோடு மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், சாரு மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. இதனையடுத்து, மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சாருவுக்கு, 3 பிரிவுகளின் கீழ் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 6 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி மாலதி உத்தரவிட்டார்.

மேலும், பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு மாத காலத்திற்குள், தமிழக அரசு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். இதனையடுத்து, குற்றவாளி சாரு சிறையில் அடைக்கப்பட்டார்.