மகாராஷ்டிராவில் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதலமைச்சர் அஜித்பவாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா சட்டசபைக்குக் கடந்த 21 ஆம் தேதி தேர்தல் நடந்த நிலையில், 24 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி மொத்தம் 288 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபைக்கு, 145 இடங்களே ஆட்சி அமைக்க போதுமானதாக இருக்கிறது.

இருப்பினும், பாஜக - சிவசேனா கூட்டணிக் கட்சிகள் சேர்த்து மொத்தம் 161 தொகுதிகளில் வென்று வெற்றிபெற்றது. ஆனால், முதலமைச்சர் பதவியை இரு கூட்டணிக் கட்சிகளும் சுழற்சி முறையில் பிரித்துக்கொள்ளத் தேர்தலுக்கு முன்பே பேசியதாக சிவசேனா கூற, அதனை பாஜக கடைசி வரை மறுத்துவிட்டது.

இதனால், மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா கட்சிகள் ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்தது. இதனையடுத்து, அங்குக் கடந்த 12 ஆம் தேதி குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்பட்டது.

பின்னர், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசுடன் புதிய கூட்டணி தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அதில் நீண்ட இழுபறிக்குப் பின் சுமுக உடன்பாடு ஏற்பட்டது. இதில், சிவசேனா தலைமையில் ஆட்சி அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

ஆனால், ஒரே இரவில் மகாராஷ்டிராவின் அரசியல் நிலைமையே தலைகீழாக மாறிப்போனது.

திடீர் திருப்பமாக பாஜக - தேசியவாத காங்கிரஸ் புதிய கூட்டணி அமைத்து, ஆட்சி அமைத்துள்ளது.

அதன்படி, பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராகவும், துணை முதலமைச்சராகத் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் மருமகன் அஜித் பவாரும் பதவியேற்றுள்ளனர்.

இதன் காரணமாக, அங்குக் கடந்த 10 நாட்களாக அமலிலிருந்த குடியரத்துலைவர் ஆட்சி தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

இதனிடையே, இன்று மகாராஷ்டிராவில் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதலமைச்சர் அஜித்பவாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மகாராஷ்டிராவில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழல் குறித்து, மும்பையில் காங்கிரஸ் கட்சி அவசர
ஆலோசனை நடத்த உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்க்கே, கே.சி.வேணுகோபால் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

அதேபோல் உத்தவ் தாக்கரேவும், சரத்பவாரும் இன்று மீண்டும் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்த இருக்கிறார்கள்.

இதனிடையே, கடந்த மாதம் மகாராஷ்டிராவில் தேர்தல் நடைபெற்றது முதல், தற்போது வரை நாளுக்கு நாள் பல்வேறு அதிரடி திருப்பங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.