மகாராஷ்டிரா அரசியலில் அடுத்தடுத்து அதிரடி திருப்பமாக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் தேவேந்திர பட்னாவிஸ்.

மகாராஷ்டிரா சட்டசபைக்குக் கடந்த 21 ஆம் தேதி தேர்தல் நடந்த நிலையில், 24 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி மொத்தம் 288 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபைக்கு, 145 இடங்களே ஆட்சி அமைக்க போதுமானது. இருப்பினும், பாஜக - சிவசேனா கூட்டணிக் கட்சிகள் சேர்த்து மொத்தம் 161 தொகுதிகளில் வென்று வெற்றிபெற்ற நிலையில், முதலமைச்சர் பதவியை இரு கூட்டணிக் கட்சிகளும் சுழற்சி முறையில் பிரித்துக்கொள்ளத் தேர்தலுக்கு முன்பே பேசியதாக சிவசேனா கூற, அதனை பாஜக கடைசி வரை மறுத்துவிட்டது.

இதனால், மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா கட்சிகள் ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்தது. இதனையடுத்து, அங்குக் கடந்த 12 ஆம் தேதி குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்பட்டது.

பின்னர், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசுடன் புதிய கூட்டணி தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அதில் நீண்ட இழுபறிக்குப் பின் சுமுக உடன்பாடு ஏற்பட்ட நிலையில், சிவசேனா தலைமையில் ஆட்சி அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால், ஒரே இரவில் மகாராஷ்டிராவின் அரசியல் நிலைமையே தலைகீழாக மாறிப்போனது.

திடீர் திருப்பமாக பாஜக - தேசியவாத காங்கிரஸ் புதிய கூட்டணி அமைத்து, ஆட்சி அமைத்தது. அதன்படி, பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராகவும், துணை முதலமைச்சராகத் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் மருமகன் அஜித் பவாரும் பதவியேற்றுள்ளனர்.

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நேற்று நாடாளுமன்றம் நாள் முழுவதும் முடங்கியது. மேலும், இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனால், பெரும்பான்மை இல்லாத நிலையில், வேறு வழியின்றி மகாராஷ்டிரா முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் தேவேந்திர பட்னாவிஸ். மேலும், ஆளுநரைச் சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அதேபோல், துணை முதலமைச்சர் பதவியை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் மருமகன் அஜித் பவாரும் ராஜினாமா செய்தார்.

இதனிடையே, மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்த தேவேந்திர பட்னாவிஸ், மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம் என்று தெரிவித்தார். மேலும், சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுப்பார் என்றும், பாஜக எந்தக் கட்சிகளையும் உடைக்காது என்றும் தெரிவித்தார்.

அதேபோல், மகாராஷ்டிராவின் புதிய முதலமைச்சராக உத்தவ் தாக்கரே நாளை பதவி ஏற்பார் என்றும் கூறப்படுகிறது.

இதனிடையே, மகாராஷ்டிராவில் முதலமைச்சர் பதவியைத் தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா செய்ததால், நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறாது என்பது குறிப்பிடத்தக்கது.