நேருக்கு நேர் நின்று இளைஞரைச் சிங்கம் தாக்க முற்பட்ட நிலையில், அவர் அதிசயமாக உயிர்பிழைத்துள்ளார்.

டெல்லி உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை எல்லாம் நேற்று வழக்கம்போல், பொதுமக்கள் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தனர். அப்போது, சிங்கம் இருக்கும் பகுதியில் உள்ள மிகப் பிரமாண்டமான தடுப்புச் சுவர் மற்றும் வேலையைத் தாண்டி ஒரு இளைஞர் உள்ளே குதித்துள்ளார்.

இந்நிலையில், சிங்கத்தை வேடிக்கை பார்த்தவர்கள் கத்தி கூச்சலிட, அந்த இளைஞர் துளிகூட பயமில்லாமல் சிங்கத்தின் அருகில் சென்று முட்டிப்போட்டு அமர்ந்த நிலையில் சிங்கத்துடன் பேசிக்கொண்டிருந்தார். சிங்கமும், அந்த இளைஞர் அருகில் வந்து மோப்பம் பிடித்தது. அப்போது, அந்த இளைஞர் சிங்கத்தின் முடியை தடவிக்கொடுக்கிறார்.

திடீரென்று அடுத்த நில வினாடிகளிலேயே, சிங்கம் அவரை தாக்க முற்பட்டு, அந்த இளைஞரை அங்குள்ள மரத்தில் அணைத்தபடி கவ்விக் கடிக்க முயன்றது. ஆனால், அதற்குள் எங்கிருந்தோ ஓடிவந்த பூங்கா ஊழியர்கள், சிங்கத்தின் மீது மயக்க ஊசியைச் செலுத்தினர். இதில், சிறிது தூரம் சென்ற சிங்கம் மயங்கியது.

இதனையடுத்து, இந்த இளைஞரை மீட்ட ஊழியர்கள், போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர், போலீசார் நடத்திய விசாரணையில், அந்த இளைஞர் பெயர் ரேஹன் கான் என்பதும், அவர் பீகாரைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும், அந்த இளைஞர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.

இதனிடையே, டெல்லி உயிரியல் பூங்காவில் சிங்கத்தின் முன்பு இளைஞர் ஒருவர் சென்று, நேருக்கு நேர் நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.