“எங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும்” என்று கூறி போலீசார் தங்களது குடும்பத்தினருடன் சுமார் 11 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டெல்லியில் உள்ள தீஸ் அசாரி நீதிமன்றத்தின் வாகன நிறுத்துமிடத்தில், கடந்த 2 ஆம் தேதி அன்று, காவலில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கும், அங்குள்ளவழக்கறிஞர் ஒருவருக்கும் இடையே பிரச்சனை எழுந்துள்ளது.

தொடக்கத்தில் வாய் தகராறாக எழுந்த பிரச்சனை, போகப் போக இருவருக்குள்ளும் மிகப்பெரிய பிரச்சனையாக விஸ்வரூபம் எடுத்தது. இதனையடுத்து,ஆத்திரமடைந்த வழக்கறிஞர், காவலில் ஈடுபட்டிருந்த போலீசாரை கடுமையாகத் தாக்கினார். இந்த வீடியோ, அடுத்த சில நிமிடங்களிலேயே சமூகவலைத்தளங்களில் வேகமாகப் பரவியது.

இதனையடுத்து, அங்கு நிறுத்தப்பட்டிருந்த போலீசாரின் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இது தொடர்பாக விரைந்த வந்த போலீசார், நிலைமையைக்கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில், ஒரு வழக்கறிஞர் குண்டடிபட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து, வழக்கறிஞர் - போலீசார் மோதல் தொடர்பான வழக்கு, டெல்லி உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்தநீதிபதி, கலவரத்தைக் கட்டுப்படுத்த தவறியதாகக் கூறி, சிறப்புக் காவல் ஆணையர் மற்றும் கூடுதல் ஆணையர் ஆகியோரை இடமாற்றம் செய்ய அதிரடியாக
உத்தரவிட்டார்.

மேலும், இந்த கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த, ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.பி.கர்கை நியமித்து, 6 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்என்றும் உத்தரவிட்டார்.

இதனால், அதிருப்தி அடைந்த டெல்லி போலீசார், மோதலில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், தங்களுக்குப் பாதுகாப்பு வழக்ககோரியும், தங்களது குடும்பத்துடன், டெல்லி காவல்துறை தலைமை அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல், இந்தியா கேட்பகுதியிலும் போலீசார், தங்களது குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, இரவு நேரத்தில், போலீசார் நீதிகேட்டு மெழுகுதிரி ஏந்திபோராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசாரின் போராட்டம் தொடர்பாக, உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டிருந்தது. இதற்கு, டெல்லி காவல்துறை சார்பில் விளக்கம் அளித்து, அறிக்கைதாக்கல் செய்யப்பட்டது.

சுமார் 11 மணி நேரம் நீடித்த இந்த போராட்டத்தில், போலீசாரின் கோரிக்கை ஏற்கப்படுவதாகச் செய்திகள் வெளியானது. அதன்படி, தாக்கப்பட்ட போலீசாருக்குநிவாரணமும், சரியான சிகிச்சையும் அளிக்க காவல்துறை உயர் அதிகாரிகள் சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. அத்துடன், காவல்துறை உயர் அதிகாரிகள்கேட்டுக்கொண்டபடியால், 11 மணி நேரம் நீடித்த காவல்துறையினரின் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

இதனிடையே, பாதுகாப்பு கேட்டு போலீசாரே, தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்திய விவகாரம், இந்தியா முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.