11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகப் பரதநாட்டிய ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

சென்னை ஆவடி அன்னை தெரசா, 3 வது தெருவைச் சேர்ந்த 53 வயதான ரவிவர்மா என்கிற பாலசுப்பிரமணியம், கடந்த 6 ஆண்டுகளாகத் தனது வீட்டிலேயே பரதநாட்டிய பள்ளி நடத்தி வருகிறார்.

இவரது பள்ளிக்கு ஏராளமான பள்ளி மாணவிகள் பரதநாட்டியம் கற்க வருவது வழக்கம். அதே பகுதியைச் சேர்ந்த 11 வயது பள்ளி மாணவி ஒருவர், மாலை நேரத்தில் இவரின் பரதநாட்டிய பள்ளியில் சேர்ந்து பரதக் கலையை கற்று வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 29 ஆம் தேதி வழக்கம்போல் பரதநாட்டிய வகுப்பிற்குச் சிறுமி வந்துள்ளார். அப்போது, மற்ற மாணவிகள் யாரும் இல்லாத நிலையில், அந்த 11 வயது சிறுமியைக் கட்டாயப்படுத்தியும், மிரட்டியும் ரவிவர்மா பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், இது குறித்து வெளியே சொல்லக்கூடாது என்றும், சிறுமியை அவர் மிரட்டி அனுப்பி உள்ளார்.

இதனைத்தொடர்ந்து, சிறுமி பரதநாட்டிய வகுப்பிற்கு வராமல் இருந்துள்ளார். அப்போது, சிறுமியின் பெற்றோர் ஏன் பரதநாட்டிய வகுப்பிற்குச் செல்லவில்லை என்று கேட்டுள்ளனர். அப்போது, சிறுமி நடந்ததைக் கூறி, இனிமேல் அங்குச் செல்லமாட்டேன் என்று கூறியுள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர்கள், தங்கள் உறவினர்களைத் திரட்டி, ரவிவர்மா வீட்டில் வந்து சண்டைபோட்டுள்ளனர். இது குறித்து விரைந்து வந்த போலீசார், ரவிவர்மாவை மீட்டு, காவல்நிலையம் அழைத்துச்சென்றனர். அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்களும், காவல்நிலையம் சென்று ரவிவர்மா மீது பாலியல் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ரவிவர்மாவை கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

கலைகளைக் கற்றுத் தரவேண்டிய ஆசிரியர் ஒருவரே, 11 வயது பள்ளி மாணவியிடம் தவறாக நடந்துகொண்ட சம்பவம், அவரிடம் படித்த பள்ளி மாணவிகள் மத்தியிலும், அவர்களது பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.