கடலூர் திருமண விழாவில் புதுமண தம்பதிக்கு நண்பர்கள் சேர்ந்த வெங்காயத்தைப் பரிசளித்த நிகழ்வு வைரலாகி வருகிறது.

தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல், இந்தியா முழுவதும் வெங்காயத்தின் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால், கடந்த சில நாட்கள் முன்பு வரை, சென்னையில் வெங்காயத்தின் விலை 200 ரூபாயைத் தாண்டி விற்பனை செய்யப்பட்டு வந்தது.

அத்துடன், தங்கத்திற்கு ஈடாக வெங்காயம் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் இளைஞர்கள் மீம்ஸ்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

அந்த மீம்ஸ்சை மெய்ப்பிக்கும் விதமாகவும், சினிமா பட பாணியிலும், வட மாநிலங்களில் கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள் கள்ளாப் பெட்டியில் உள்ள பணத்தைக் கொள்ளையடிக்காமல், மூட்டை மூட்டையாக வெங்காயத்தை மட்டும் கொள்ளையடித்துச் செல்லும் நிகழ்வுகளும் தொடர்ந்து வருகின்றன.

தற்போது, கடலூர் திருமண விழாவில் அதையும் மிஞ்சும் வகையிலான சுவாரசியமான நிகழ்வு ஒன்று நடந்துள்ளது.

கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் “சாகுல் - சப்ரினா” ஆகிய இஸ்லாமிய ஜோடிகளுக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. இந்த விழாவில் உறவினர்கள், நண்பர்கள் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டு, புதுமண தம்பதிக்குத் தங்கம், பணம் ஆகியவற்றை மணமக்களிடம் பரிசாகக் கொடுத்துச் சென்றனர்.

அப்போது, மணமக்களை வாழ்த்த வந்த சில நண்பர்கள், வித்தியாசமான முறையில் புதுமண தம்பதிக்கு வெங்காயத்தைப் பொக்கே போல் பார்சல் செய்து, அதைப் பரிசுப் பொருளாக வழங்கினர். இதனைப்பெற்றுக்கொண்ட மணமக்கள் வாய்விட்டே சிரித்துவிட்டனர். இந்த நிகழ்வு, திருமண மண்டபத்தில் கூடியிருந்தவர்கள் இடையே சுவாரசியத்தை ஏற்படுத்தியது.

தற்போது, புதுமண தம்பதிக்கு நண்பர்கள், வித்தியாசமான முறையில் வெங்காயத்தைப் பரிசாகத் தந்தது புகைப்படம், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.