கோவையில் சாலையில் வைக்கப்பட்ட அதிமுக கொடிக் கம்பம் சரிந்து இளம் பெண் மீது விழுந்ததில், அவர் மீது லாரி மோதியுள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காகச் சாலையில் வைக்கப்பட்ட அதிமுக பேனர் சரிந்து விழுந்ததில், இளம் பெண் சுபஸ்ரீ நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது பின்னாடி வந்த லாரி, அவர் மீது மோதியில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இளம் பெண் சுபஸ்ரீ உயிரிழந்த ஈரம் காய்வதற்குள், மீண்டும் அதேபோல், ஒரு சம்பவம் கோவையில் தற்போது நிகழ்ந்துள்ளது.

கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்கிற அனுராதா, அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், இன்று காலை வழக்கம்போல் பணிக்கு சென்று கொண்டிருந்தார். . அப்போது, அந்த பகுதியில் உள்ள சாலையில் திருமண வரவேற்பு நிகழச்சிக்காகச் சாலையில் நடுவே வைக்கப்பட்ட அதிமுக கொடிக் கம்பம் சாய்ந்து, இளம் பெண் மீது விழுந்துள்ளது. இதில், அந்த பெண் நிலைதடுமாறி கீழே சரிந்து விழுந்துள்ளார். அப்போது, பின்னாடி வந்த லாரி, இளம் பெண்ணின் காலில் ஏறி உள்ளது. இதில், ரத்த வெள்ளத்தில் அவர் துடிதுடித்துள்ளார்.

இதனையடுத்து, அந்த வழியாகச் சென்றவர்கள், இளம் பெண்ணை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவருக்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், அதிமுக கட்சிக் கொடிக் கம்பம் சாய்ந்து விழுந்ததால், ஏற்பட்ட விபத்தை, போலீசார் மூடி மறைக்கப் பார்ப்பதாகப் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

இதனிடையே, அதிமுக பிரமுகர் ஒருவரின் இல்லத் திருமண விழா, கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்று முடிந்த நிலையில், அந்த பகுதியில் உள்ள சாலையில் வைக்கப்பட்ட கட்சிக் கொடி இன்னும் அகற்றப்படாமல் அப்படியே இருந்துள்ளது. அந்த கட்சிக் கொடியில் ஒன்று சரிந்து விழுந்துதான், தற்போது இளம் விபத்தில் சிக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.