தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,224 ஆக உயர்ந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, தமிழகம் உட்பட நாடு முழுவதும் 3 முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையிலும், கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியவில்லை. இதன் காரணமாக, தமிழகம் உட்பட நாடு முழுவதும் வரும் 31 ஆம் தேதி வரை 4 வது முறையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனினும், சென்னை கோயம்பேட்டை தொடர்ந்து சென்னை எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட் வியாபாரிகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால், எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட் மூடப்பட்டது.

சென்னையில் இதுவரை 190 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன், சென்னை காவல் துறையில் கொரோனா தொற்று உறுதியான உதவி ஆய்வாளர் சிகிச்சை முடிந்து பணியில் சேர்ந்தார். காவல் துறை ஆணையாளர் விஸ்வநாதன் அவரை வாழ்த்தி உற்சாகத்துடன் வரவேற்றார்.

சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,761 ஆக உயர்ந்துள்ள நிலையில், அங்கு இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட 40 பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உட்பட இன்று ஒரே நாளில் 15 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவர்களுடன் தொடர்பில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 201 ஆக அதிகரித்துள்ளது.

கருரில் இன்று ஒரே நாளில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட 6 பேருக்கு கொரோனா தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஓசூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கொரோனா பாதித்த 21 பேரில் 19 பேர் குணமடைந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்

ஒட்டுமொத்தமாக, தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,224 ஆக உயர்ந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளதாக, தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.