பலாத்காரம் செய்யப்பட்ட பெண் போலீஸில் புகார் அளித்துள்ள நிலையில், “ஊர் மானம் போச்சு’ என பாதிக்கப்பட்ட பெண்ணுக்குப் பஞ்சாயத்தில் அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சத்தீஷ்கர் மாநிலம் ஜஸ்புர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தில், 23 வயது இளம் பெண் ஒருவர், தனது குடும்பத்தினர் திட்டியதால், கடந்த 4 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி, தனது உறவினர் வீட்டில் தங்கி உள்ளார்.

அப்போது, தனக்கு ஏற்கனவே அறிமுகமான சந்தீப், கிஷோர் ஆகியோரை சந்தித்து வேலை கேட்டுள்ளார். அவர்களும், கட்டிட வேலை இருக்கிறது என்று கூறி, அந்த பெண்ணை தனியாக வரவழைத்துள்ளனர்.

அந்த பெண்ணும், அவர்களை நம்பி வேலைக்குத் தனியாக வந்துள்ளார். வந்த பிறகுதான் தெரிந்தது, தான் ஏமாற்றப்பட்டோம் என்பது. இதனையடுத்து, அங்கிருந்த செல்ல முற்பட்ட பெண்ணை, சந்தீப் மற்றும் கிஷோர் ஆகியோர் பலவந்தமாகக் கூட்டுப் பலாத்காரம் செய்து, அந்த பெண்ணை நாசம் செய்துள்ளனர். மேலும், இதனை வெளியே சொன்னால், கொலை செய்துவிடுவோம் என்றும், அந்த பெண்ணை மிரட்டி அனுப்பி உள்ளனர்.

இதனையடுத்து, வீட்டிற்கு வந்து தனது தாயாரிடம் எல்லாவற்றையும் அவர் கூறியுள்ளார். பின்னர், அருகில் உள்ள காவல் நிலையம் சென்று அப்பெண், தனக்கு நேர்ந்த அவலங்களை சொல்லியிருக்கிறார். போலீசார், அதனைப் புகாராக எழுதித் தரச்சொல்லியிருக்கிறார்கள்.

புகார் தர பயந்த அவர்கள், ஊரில் உள்ள பெரியவர்களை அழைத்து வருவதாகக் கூறிவிட்டு, திரும்பிவிட்டனர். ஆனால், இந்த தகவல் ஊர் முழுக்க பரவிய நிலையில், ஊரில் பஞ்சாயத்து கூட்டப்பட்டது.

பஞ்சாயத்தில், இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இருவருக்கும் தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன், இந்த விவகாரம் காவல் நிலையம் வரை சென்றதால், “தன் ஊர் மானம் போச்சு” என்று அப்பெண் மீது பஞ்சாயத்துத் தலைவர்கள் குற்றம் சாட்டினர். இதனால், அந்தப்பெண்ணும் குற்றவாளி என்று கூறி, ஊர் பஞ்சாயத்தார்கள், அப்பெண்ணுக்கும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.

இந்த செய்தி அங்குள்ள ஊடகங்களில் பரவிய நிலையில், இளம் பெண்ணை பலாத்காரம் செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்குப் பஞ்சாயத்தில் அபராதம் விதிக்கப்பட்டது குறித்து, தங்களுக்கு எழுத்துப் பூர்வமாக எந்த புகாரும் வரவில்லை என்று போலீசா் தெரிவித்துள்ளனர்.