சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூவில் விஷவாயு தாக்கிய தம்பியைக் காப்பாற்ற முயன்ற அண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னையில் பிரபல வணிக வளாகமாகத் திகழும் எக்ஸ்பிரஸ் அவென்யூவில் உள்ள கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக 2 இளைஞர்கள் வந்துள்ளனர். அவர்கள் இருவரும் அண்ணன் தம்பிகள் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், கழிவுநீர்த் தொட்டியில் இறங்கி தம்பி சுத்தம் செய்துகொண்டு இருந்தார். இதனையடுத்து, சிறிது நேரத்திலேயே அவர் மயங்கி உள்ளார். அப்போது, மேலே நின்றுகொண்டிருந்த அண்ணன், இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதனையடுத்து, மயங்கிய தம்பியை மீட்பதற்காக, அண்ணன் கழிவுநீர் தொட்டியில் இறங்கி உள்ளார். அப்போது, விஷவாயு தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, அங்கு பணிக்கு இருந்த காவலர்கள், மயக்கமடைந்த தம்பியை அருகில் உள்ள ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவருக்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து விரைந்து வந்த போலீசார், உயிரிழந்தவரின் உடலை மீட்டு, பிரதேப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, தகுந்த உபகரணங்கள் இல்லாமல் கழிவுநீர் தொட்டியில் இறங்கியதே, உயிரிழப்புக்குக் காரணம் என்பது தெரியவந்தது. அத்துடன், 2 இளைஞர்களையும் பணிக்கு அமர்த்திய நபர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இதனால், எக்ஸ்பிரஸ் அவென்யூவில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.