சென்னையில் கல்லூரி மாணவர்களுக்குக் கஞ்சா பார்ட்டி வைத்த தாயும் மகனும் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர்.

சென்னை கோயம்பேடு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தொடர்ந்து தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில், நெற்குன்றம் அன்னம்மாள் நகரில் ஒரு வீட்டில் கல்லூரி மாணவர்களுக்குக் கஞ்சா பார்ட்டி நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, போலீசார் மஃப்டியில் அந்த வீட்டைக் கண்டுபிடித்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வீட்டில் ஒரு கிலோ அளவிற்குக் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, கஞ்சாவை வைத்திருந்த குற்றத்திற்காக 58 வயதான தாய் ராஜேஸ்வரியும், 37 வயதானது அவரது மகன் பாலமுருகனும் கைது செய்யப்பட்டனர்.

பின்னர், அவர்களிடம் நடத்திய விசாரணையில், சென்னை கடற்கரை அருகில் உள்ள சத்யா நகர்ப் பகுதியிலிருந்து மொத்தமாகக் கஞ்சாவை வாங்கி வந்து, வார இறுதி நாட்களில் நண்பர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களை வீட்டிற்கு அழைத்து வந்து கஞ்சா பார்ட்டி வைத்து, அவர்களிடம் அதிகமான அளவில் பணம் வசூல் செய்வதும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, கஞ்சா எங்கிருந்து வருகிறது? எப்படி விற்கப்படுகிறது? என்பது குறித்ததெல்லாம் போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.