சமஸ்கிருதம் பேசுவதால் சர்க்கரை மற்றும் கொழுப்பை சீராக வைத்திருக்க முடியும் என்று பாஜக எம்.பி.கணேஷ் சிங் நாடாளுமன்றத்தில் பேசியது சர்ச்சையையும், சிரிப்பலையையும் ஏற்படுத்தி உள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று சமஸ்கிருத பல்கலைக் கழகங்கள் அமைப்பது தொடர்பான மசோதா மீதான விவாதம் நடைபெற்றது.

அப்போது, பாஜக எம்.பி. கணேஷ் சிங் எழுந்து சமஸ்கிருத பல்கலைக் கழகங்கள் அமைப்பது தொடர்பாக உரையாற்றினார்.

அதன்படி, “கம்ப்யூட்டர் சமஸ்கிருத மொழி மூலம் மென்பொருள்களை வடிவமைத்தால் அதில் எவ்வித கோளாறுகளும் இருக்காது என அமெரிக்காவின் நாசா செய்த ஆராய்ச்சியின் படி தெரியவந்துள்ளதாக” குறிப்பிட்டார். இதற்கு அவையிலிருந்த சில உறுப்பினர்கள் சித்து விட்டனர்.

மேலும், தொடர்ந்து பேசிய அவர், “சமஸ்கிருத மொழியில் பேசுவதன் மூலம் சர்க்கரை நோயையும், இதய கோளாறுகளையும் மற்றும் கொழுப்பின் அளவினையும் தவிர்க்க முடியும்” என்றும் அவர் பேசி முடித்ததும் பலரும் சிரித்து விட்டனர்.

இதனையடுத்து, அவரது பேச்சு செய்தியாகப் பரவியது. இதற்கு பல்வேறு தரப்பினரும், எதிர்க் கருத்து கூறி வரும் நிலையில், அவரை சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் க்ரியேட்டர்கள் மீம்ஸ் போட்டு கடுமையாகக் கலாய்த்து வருகிறார்கள். இதனால், பாஜக எம்.பி. கணேஷ் சிங்கின் சமஸ்கிருத பேச்சு பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக, அவர் சமஸ்கிருத மொழிக்குச் சாட்சியாக நாசா செய்த ஆராய்ச்சியைச் சாட்சிக்கு இழுத்தது சமூக வலைத்தளங்களில் பெரும் சிரிப்பலைகளை ஏற்படுத்தி வருகிறது.