“நேற்றைய தினத்தை பெண்களுக்கு நீதி கிடைத்த நாளாகக் குறித்து வைத்துக்கொள்ளலாம்” என்று நடிகை நயன்தாரா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கடந்த 27 ஆம் தேதி, நாட்டையே உலுக்கும் வகையில் 26 வயதான பிரியங்கா ரெட்டி என்ற இளம் பெண் மருத்துவர், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது.

இதனையடுத்து, நேற்று அதிகாலை அந்த 4 பேரும் தப்பி ஓட முயன்றபோது, என்கவுன்டரில் கொல்லப்பட்டதாக ஐதராபாத் போலீசாரால் அறிவிக்கப்பட்டனர். இதற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் ஆதரவும் எதிர்ப்பும் என்று தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள நடிகை நயன்தாரா, “தெலங்கானா போலீஸ், நீதியை நிலை நாட்டியிருப்பதாக புகழாரம்” சூட்டி உள்ளார்.

மேலும், “காட்டுமிராண்டிகளின் ஈனத்தனமான, சட்டத்திற்குப் புறம்பாக, பெண் மீது காட்டப்பட்ட வன்முறைக்கு எதிராகத் தீர்க்கமான பதிலளித்துள்ளார்கள். பெண்களின் முன்னேற்றத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது நம் கடமை. இந்த நடவடிக்கை என்பது சரியாக வழங்கப்பட்ட நீதி. இதுவே நியாயமான மனித மிக்க நடவடிக்கை என அழுத்திச் சொல்வேன்” என்று காட்டமாகவே அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அதேபோல், “நாட்டில் உள்ள பெண்கள் அனைவரும் இந்த நாளை, தேதியைப் பெண்களுக்குச் சரியான நியாயம் கிடைத்த நாளாகக் குறித்து வைத்துக் கொள்ளலாம். பெண்களுக்கு இது சற்றே ஆறுதல்.

நம் குழந்தைகளுக்குப் பெண் பாதுகாப்பு குறித்த கல்வியைக் கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியம். குறிப்பாக, நம் ஆண் குழந்தைகளுக்குப் பெண்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை கற்றுத் தர வேண்டும். பெண்களை மதிப்பவனே, பாதுகாப்பவனே நாயகன் என்பதை அழுத்தமாக அவன் மனதில் பதிய வைக்க வேண்டும். எதிர்கால உலகைப் பெண் மீதான என்முறைக்கு எதிரான, அன்பான உலகாக மாற்ற வேண்டியது நம் கடமை” என்று நடிகை நயன்தாரா தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தாறுமாறாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தற்போது, நடிகை நயன்தாராவின் அறிக்கை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.