திமுக, அதிமுகவில் இருந்துவிட்டு இறுதியாக நடிகர் ராதாரவி பாஜகவில் இணைந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் 1976 ஆம் ஆண்டு அறிமுகமான நடிகர் ராதாரவி, இதுவரை 500 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துப் பிரபலமான நடிகராக இப்போதும் வலம் வருகிறார். சினிமாவைப் போலவே, அவருக்கு அரசியலிலும் கவனம் திரும்பியது.

அதன்படி, முதல் முதலில் திமுகவில் தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டார். பின்னர், அந்த கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, திமுகவிற்கு நேர் எதிர்க் கட்சியான அதிமுகவில் இணைந்தார்.

பின்னர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அங்கிருந்து விலகி, மீண்டும் திமுகவில் அவர் சேர்ந்தார்.

அப்போது, ஒரு சினிமா விழாவில் கலந்துகொண்ட நடிகர் ராதாரவி, நடிகை நயன்தாரா குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார். இதனையடுத்து, அவர் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். இதனால், மனமுடைந்த அவர், திமுகவிலிருந்து தானாகவே விலகி அதிமுகவிற்கு ஆதரவு அளித்து வந்தார்.

இந்நிலையில், தமிழக பாஜக கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, அக்கட்சியின் தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா இன்று சென்னை வருகை தந்தார். அப்போது, அவரை சந்தித்த நடிகர் ராதாரவி, சால்வை அணிவித்து அவரது முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். அப்போது, பாஜகவின் கொடியை, தனது கரங்களில் அவர் ஏந்தி போஸ் கொடுத்தார்.

தற்போது, இந்த புகைப்படமும், பாஜகவில் ராதாரவி சேர்ந்துள்ள செய்தியும், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதனிடையே, அதிமுகவை எதிர்த்து திமுகவிலும், பின்னர் திமுகவை எதிர்த்து அதிமுகவிலும், மீண்டும் திமுகவிலும், பின்னர் அதிமுகவிலும் என்று 2 ரவுண்ட்டு வந்த ராதாரவி, தற்போது பாஜகவில் இணைந்துள்ள நிகழ்வு, “அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனுமில்லை” என்பதைக் காட்டுவதாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.